போதைப்பொருள் உட்கொண்டாரா பின்லாந்து பிரதமர்?

என்ன சொல்கிறது பரிசோதனை முடிவு?
போதைப்பொருள் உட்கொண்டாரா பின்லாந்து பிரதமர்?

மது விருந்தில் கலந்துகொண்டதாக கடந்த வாரம் பெரும் சர்ச்சையில் சிக்கியவர் பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன். விருந்து தொடர்பான காணொலி வைரலானதைத் தொடர்ந்து, அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா எனும் விவாதமும் எழுந்தது. இதையடுத்து ஆக்ஸ்ட் 19-ல் அவர் போதைப்பொருள் பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவு நேற்று வெளியானது.

ஆகஸ்ட் 6-ம் தேதி நடந்ததாகச் சொல்லப்படும் மது விருந்து குறித்த தகவல்கள் வெளியானதும், சன்னா மரீன் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் எனப் பலர் குற்றம்சாட்டினர். ஆனால், “எனது பதின்ம வயதில்கூட போதைப்பொருள் உட்கொண்டதில்லை” என்று அவர் விளக்கமளித்தார். சர்ச்சைக்குரிய அந்த விருந்தின்போது எந்தவிதமான போதைப்பொருளும் பரிமாறப்பட்டதாகத் தான் பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அன்றைய விருந்தின்போது, ‘தேவைப்பட்டால் அரசுப் பணிகளைக் கவனிக்கும் வகையில்’ குறைந்த அளவே மது அருந்தியதாகக் கூறியிருந்த அவர், தன் தோழிகளுடன் இணைந்து மது அருந்தி, ஆடிப்பாடி கொண்டாடியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக பல பெண்கள் மது அருந்திவிட்டு நடனமாடும் காணொலிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.

தனது தோழிகளுடன் மதுவிருந்தில் கலந்துகொள்வது பிரதமரின் தனிப்பட்ட உரிமை என்றாலும், அந்தக் காட்சி படமாக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்படும் அளவுக்கு அவர் அலட்சியமாக இருந்தது தவறு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதற்குப் பதிலளித்த சன்னா மரீன், தான் மது அருந்துவது படமாக்கப்பட்டது தனக்குத் தெரிந்திருந்தாலும் அது பொதுவெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். அந்தக் காட்சி வெளியானதற்குத் தனது தோழிகள் காரணமல்ல என நம்புவதாகவும் பதிவுசெய்திருந்தார். அதேசமயம் அந்த விருந்தின்போது போதைப்பொருள் உட்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன.

இந்நிலையில், பின்லாந்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என பரிசோதனையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதற்காக என்ன விதமான பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரதமர் சன்னா மரீனே அந்தப் பரிசோதனைக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டதாக அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in