பின்லாந்து திடீரென நேட்டோவில் இணைய முடிவெடுத்ததன் பின்னணி என்ன?

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பின்லாந்து பிரதமர் சன்னா மரீன்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பின்லாந்து பிரதமர் சன்னா மரீன்

உக்ரைன் மீதான போருக்கு நடுவே ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து, நேட்டோ அமைப்பில் சேர முடிவுசெய்திருக்கிறது. வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லான்டிக் நாடுகள் என அழைக்கப்படும் நார்டிக் நாடுகளில் ஒன்றான பின்லாந்து தனது பாதுகாப்புக் கொள்கையில் மேற்கொண்டிருக்கும் முக்கிய மாற்றம் இது. ராணுவ ரீதியாக அணி சேராக் கொள்கை கொண்டிருந்த பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர முன்வந்திருப்பதன் பின்னணி என்ன?

நேட்டோவை வெறுக்கும் ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க முக்கியக் காரணம், நேட்டோ அமைப்பில் சேர அந்நாடு விண்ணப்பித்ததுதான். நேட்டோ படைகள் உக்ரைனில் இருப்பது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனும் காரணத்தைச் சொல்லியே இந்தத் தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துவருகிறது ரஷ்யா.

1949-ல் 12 நாடுகளுடன் தொடங்கப்பட்ட நேட்டோ அமைப்பு, அவ்வப்போது விரிவாக்கம் செய்துவருகிறது. 1990-களின் இறுதியில் கிழக்கு நோக்கி நேட்டோவில் விரிவாக்கம் செய்ய அமெரிக்கா முடிவெடுத்தபோது ரஷ்யா அதை ரசிக்கவில்லை. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட வெர்சைல்ஸ் உடன்படிக்கை மூலம் ஜெர்மனிக்குக் கடும் நிபந்தனைகள் தரப்பட்டதுபோல, நேட்டோ படைகளின் விரிவாக்கம் தங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என ரஷ்யா கருதுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

1997-ல், ரஷ்யாவுக்கும் நேட்டோ அமைப்புக்கும் இடையில் ஃபவுண்டிங் ஆக்ட் எனும் பெயரில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறித்தான் இந்த விரிவாக்கத்தை நேட்டோ மேற்கொண்டது. 1998-ல் இதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபோதே, இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது. 1999-ல் மத்திய ஐரோப்பிய நாடுகளான போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகியவை நேட்டோவில் இணைக்கப்பட்டபோது ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பின்னரும் பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா உள்ளிட்ட கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் சேர்க்கப்பட்டன. அந்த வரிசையில், உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முயற்சிகள் நடந்தபோது ரஷ்யா மிகவும் கோபமடைந்தது.

2014-ல் க்ரைமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, நேட்டோ போன்ற ஓர் அமைப்பில் சேர்வது பாதுகாப்பளிக்கும் என்று கருதிய உக்ரைன் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 2021 ஜனவரியில்தான் நேட்டோவில் உக்ரைனைச் சேர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் அதன் அதிபர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

நேட்டோவில் சேரும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, ரஷ்யா தலைமையில் இயங்கிவரும் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) அமைப்பில் சேர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க புதின் விரும்புவதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து முடிவெடுத்திருப்பது கவனம் ஈர்க்கிறது.

போருக்குப் பின் எடுத்த முடிவு

ரஷ்யாவுடன் 1,300 கிலோட்டர் நீள எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பின்லாந்து, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர்வது அநாவசியமாக ரஷ்யாவைச் சீண்டுவதாக அமையும் எனக் கருதி அதைத் தவிர்த்தே வந்தது. ஆனால், உக்ரைன் மீதான போரை பிப்ரவரி 24-ல் தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், பாதுகாப்பு குறித்த அச்சம் பின்லாந்துக்கு வந்திருக்கிறது.

இதற்கிடையே நேட்டோவில் சேரும் முடிவுக்கு பின்லாந்து மக்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுதொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பில் 76 சதவீதம் பேர் இம்முடிவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்னர் இதுதொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 25 சதவீதம் பேர்தான் இம்முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ, “நேட்டோ அமைப்பில் பின்லாந்து சேருவது அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நார்வே, டென்மார்க் மற்றும் மூன்று பால்டிக் நாடுகள் (எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா) ஏற்கெனவே நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், பின்லாந்தும் அதில் சேர்வது கூடுதல் மதிப்பை உருவாக்கும்” என்று கூறியிருக்கிறார். பின்லாந்தை அன்புடன் வரவேற்பதாக நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறியிருக்கிறார். நேட்டோவில் உள்ள பிற நாடுகளும் பின்லாந்தின் முடிவை வரவேற்றிருக்கின்றன.

இதுதொடர்பான முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க பின்லாந்து அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவிருக்கின்றனர். தொடர்ந்து பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் சேர முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in