குவாட் மாநாட்டின்போது அச்சுறுத்திய சீன, ரஷ்யப் போர் விமானங்கள்: ஜப்பான் அதிர்ச்சித் தகவல்

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பான குவாட் அமைப்பின் மாநாடு இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் மாநாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜப்பான் அருகே சீன, ரஷ்யப் போர் விமானங்கள் பறந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புட் துறை அமைச்சர் நொபுவோ கிஷி தெரிவித்திருக்கிறார்.

ஜப்பானின் வான் எல்லையை மீறி அந்த விமானங்கள் பறக்கவில்லை என்றாலும், தொலைதூரம் பறக்கும் சீன, ரஷ்யப் போர் விமானங்கள் அந்நாட்டின் அருகே கடந்த நவம்பர் மாதம் மூன்று முறை பறந்திருக்கின்றன. இன்று குவாட் மாநாடு நடக்கும் நிலையில் நான்காவது முறையாக அவ்விமானங்கள் பறந்துசென்றிருக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குண்டுவீசித் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இரண்டு சீனப் போர் விமானங்களும், அதே ரகத்தைச் சேர்ந்த இரண்டு ரஷ்யப் போர் விமானங்களும் ஜப்பான் கடல் பகுதியின் மீது இணைந்து பறக்கத் தொடங்கின. அவை இணைந்து கிழக்குச் சீனக் கடல் பகுதியில் பறந்ததன. பின்னர் அவை பசிபிக் பெருங்கடலை நோக்கிப் பறந்தன” என்று கூறிய அவர், ரஷ்யாவைச் சேர்ந்த உளவு சேகரிப்பு விமானம் ஒன்றும், வடக்கு ஹொக்கைடோ பகுதியிலிருந்து நோட்டோ தீபகற்பம் வரை பறந்ததாகவும் குறிப்பிட்டார். இது டோக்கியோவில் குவாட் மாநாடு நடக்கும் நிலையில், கோபமூட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பலத்தைக் காட்டி அழுத்தம் தருவதன் மூலம், நடப்பு நிலவரத்தை மாற்ற நடக்கும் முயற்சிகளைக் கண்டிப்பதாக குவாட் தலைவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்திருகின்றனர். அதேசமயம், ரஷ்யா, சீனா குறித்த நேரடி விமர்சனம் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகிய அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சினைகள் இருப்பதால், தனது எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க போர் விமானங்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறது ஜப்பான். இந்நிலையில், தூதரக வழிமுறைகள் மூலம் தனது கவலையை அந்நாடுகளுக்கு ஜப்பான் தெரியப்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in