‘சரணடைந்த உக்ரைன் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை’ - ரஷ்ய எம்.பி-க்கள் சொல்லும் தகவல்களால் பீதி!

‘சரணடைந்த உக்ரைன் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை’ - ரஷ்ய எம்.பி-க்கள் சொல்லும் தகவல்களால் பீதி!

துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அஸோவ்ஸ்டால் உருக்கு ஆலையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்திருக்கின்றனர். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சரணடையும்படி அவர்களுக்கு உக்ரைன் உத்தரவிட்டதாக ‘இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார்’ எனும் சிந்தனை அமைப்பு தெரிவித்திருக்கிறது. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சரணடைந்திருக்கும் நிலையில், அவர்களின் கதி என்ன எனும் கேள்வியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இரு தரப்பிலும் போர்க்கைதிகள் பரிமாற்றத்துக்கு இது வழிவகுக்கும் என ஒருபுறம் நம்பப்பட்டாலும், இன்னொரு புறம் உக்ரைன் வீரர்கள் ராணுவ விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் அல்லது சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று சில ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பது உக்ரைனியர்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது.

இதற்கிடையே, உக்ரைனிய பயங்கரவாதிகளிடமும் நாஜிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று ரஷ்ய சமூக ஊடகங்களில் விவாதங்களும் நடைபெற்றுவருகிறது. கூடவே, போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வதைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர வலியுறுத்தப்போவதாக ரஷ்ய எம்.பி-க்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.

மரியுபோல் நகரின் மற்ற பகுதிகள் அனைத்தும் ரஷ்ய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையிலும், அஸோவ்ஸ்டால் உருக்கு ஆலையை ரஷ்ய வீரர்களால் கைப்பற்ற முடியவில்லை. கடந்த பல வாரங்களாக, அங்கு உள்ள பாதாள அறைகளில் உக்ரைன் வீரர்கள் பலர் பதுங்கியிருந்தனர். அவர்களில் சிலருக்குக் காயமும் ஏற்பட்டிருந்தது. கூடவே, மரியுபோல் நகரப் பொதுமக்கள் பலரும் அங்கு பதுங்கியிருந்தனர். வாரக்கணக்கில் இந்தச் சூழல் நீடித்த நிலையில், அங்கு பதுங்கியிருக்கும் பொதுமக்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக கடந்த சில வாரங்களாக அங்கு பதுங்கியிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

இதுவரை உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த 265 வீரர்கள் சரணடைந்திருப்பதாக ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அவர்களில் 51 பேர் படுகாயமடைந்தவர்கள். அவர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனில் உள்ள மருத்துவமனைகலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது எனத் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் சர்வதேச விதிமுறைகளின் கீழ் நடத்தப்படுவார்கள் என ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் திமித்ரீ பெஸ்கோவ் கூறியிருந்தாலும், ரஷ்ய எம்.பி-க்களான லியோனிட் ஸ்டல்ட்ஸ்கி, வியாசெஸ்லாவ் வோலோதின் ஆகியோர் தெரிவிக்கும் கருத்துகள் உக்ரைனியர்களைப் பீதியில் ஆழ்த்தியிருக்கின்றன.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் மனித உருவில் இருக்கும் மிருகங்கள் என்றும், நாஜி குற்றவாளிகள் விடுவிக்கப்படக் கூடாது என்றும் இருவரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

இந்தச் சூழலில், ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரைன் வீரர்களை உயிருடன் மீட்க சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் எனும் கோரிக்கையை உக்ரைனியர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in