எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மீது கென்யா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நீடித்தது. இதில், சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் எத்தியோப்பிய உள்நாட்டுப் போரின் போது வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்பியதாக ஃபேஸ்புக் செயலியின் தாய் நிறுவனமான மெட்டா மீது கென்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது ஃபேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளைத் தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.