ஆடைகளைக் களைந்து... மின்சார ‘ஷாக்’ கொடுத்து சித்ரவதை: அதிரவைக்கும் ரஷ்யப் போர்க் குற்றங்கள்!

ஆடைகளைக் களைந்து... மின்சார ‘ஷாக்’ கொடுத்து சித்ரவதை: அதிரவைக்கும் ரஷ்யப் போர்க் குற்றங்கள்!

உக்ரைன் போரில் ரஷ்யா நிகழ்த்தியிருக்கும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையக் குழு நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர உக்ரைன் முயற்சித்ததை எதிர்த்து அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்திவருகிறது ரஷ்யா. இதில் ரஷ்யப் படைகள் பல்வேறு போர்க்குற்றங்களை நிகழ்த்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐநா மனித உரிமைகள் கவுன்சில் சார்பில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ், கார்கிவ், சுமி ஆகிய நான்கு பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் குழு விசாரணை நடத்திவந்தது.

ரஷ்யப் படைகளிடம் கைதிகளாக இருந்த உக்ரைனியர்கள் பலரிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியது. இக்குழுவினர் 27 நகரங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள், சித்ரவதை மையங்கள், கல்லறைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியிருக்கின்றனர். பாதிக்கப்பட்டோர், சாட்சிகள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் பேசி தகவல்களை இக்குழுவினர் சேகரித்திருக்கிறார்கள். மனித உரிமைக் குழுக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில், இதன் முதற்கட்ட அறிக்கை இன்று (செப்.23) வெளியாகியிருக்கிறது. இதில், சிறைக் கைதிகளைக் கடுமையாகத் தாக்குதல், அவர்களுக்கு மின்சார ‘ஷாக்’ கொடுப்பது, கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்துவது என்பன உள்ளிட்ட கொடுமைகளை ரஷ்யப் படையினர் நிகழ்த்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஏராளமானோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் கடும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாகப் பேசிய இக்குழுவின் தலைவர் எரிக் மோஸ், “நாங்கள் பார்வையிட்ட பகுதிகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருந்ததை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தோம். இப்படியான மரணங்கள் குறித்து 16 நகரங்கள் மற்றும் முகாம்களில் விசாரித்துவருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சான்றுகளின் படி, உக்ரைனில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருப்பது உண்மைதான் எனும் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறிய அவர், இதையெல்லாம் எந்தத் தரப்பு செய்தது என்பது குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய வீரர்களை உக்ரைன் படையினர் கொடுமைப்படுத்திய சம்பவங்கள் என இரண்டு நிகழ்வுகளை தனது குழு ஆய்வு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், ஏராளமான ரஷ்ய வீரர்கள் நிகழ்த்திய பாலியல் குற்றங்கள் குறித்து திடுக்கிட வைக்கும் தகவலை எரிக் மோஸ் வெளியிட்டிருக்கிறார். “4 வயது குழந்தை முதல் 82 வயது பெண் வரை ஏராளமானோர் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன” என அவர் கூறியிருப்பது சர்வதேச சமுதாயத்தை உலுக்கியெடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in