‘தோற்றுக்கொண்டிருக்கிறோம்... தோள் கொடுங்கள்’ - ஐரோப்பிய நாடுகளிடம் ஆயுதம் கோரும் உக்ரைன்

‘தோற்றுக்கொண்டிருக்கிறோம்... தோள் கொடுங்கள்’ - ஐரோப்பிய நாடுகளிடம் ஆயுதம் கோரும் உக்ரைன்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டிருப்பதாகவும், அந்நாட்டின் தாக்குதலை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களையே நம்பியிருப்பதாகவும் உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, உக்ரைன் ராணுவத்தின் உளவுத் துறைத் துணைத் தலைவர் வாடிம் ஸ்கைபிட்ஸ்கி ‘தி கார்டியன்’ நாளிதழிடம் பேசுகையில், “இந்தப் போர் தற்போது பீரங்கிப் போராக மாறியிருக்கிறது. பீரங்கிகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் பார்க்கும்போது நாங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

தங்களிடம் இருக்கும் பீரங்கிகளில் 10 சதவீதம் மேற்கத்திய நட்பு நாடுகள் அளித்ததுதான் எனக் கூறியிருக்கும் வாடிம் ஸ்கைபிட்ஸ்கி, தினமும் 5,000 முதல் 6,000 பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், ஏறத்தாழ எல்லா குண்டுகளையும் பயன்படுத்திவிட்டதால் தற்போது நேட்டோ அனுமதித்த 155 - காலிபர் திறன் கொண்ட குண்டுகளைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். குறைந்த செயல்திறன் கொண்ட குண்டுகளை ஐரோப்பா வழங்கியதாகக் கூறியிருக்கும் அவர், ஐரோப்பாவிடமிருந்து குண்டுகள் வரத்து குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ரஷ்ய பீரங்கிகளைத் தகர்க்க நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகள் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ரஷ்யாவைத் தோற்கடிக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட 60 ராக்கெட் லாஞ்சர்கள் தேவை என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகரான ஒலெக்ஸீ அரெஸ்டோவிச் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தங்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள் மற்றும் தற்காப்புத் தளவாடங்களின் பட்டியலை, ஜூன் 15-ல் பிரஸ்ஸல்ஸில் நடக்கவிருக்கும் நேட்டோ தொடர்புக் குழுக் கூட்டத்தில் உக்ரைன் அளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை பேர் உயிரிழப்பு?

இதற்கிடையே, தினமும் 60 முதல் 100 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பதாகவும், 500 பேர் காயமடைவதாகவும் அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். போரில் உயிரிழந்த உக்ரைன் ராணுவத்தினர் குறித்த முழுமையான எண்ணிக்கையை அதிபர் ஸெலன்ஸ்கி இன்னமும் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in