விசாவெல்லாம் வேண்டாம் வாங்க... ஆறு நாட்டு மக்களுக்கு அனுமதி அளித்தது சீனா

சீன விசா
சீன விசா

ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மலேசியாவிற்கும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

ஏற்கெனவே ஜப்பான், சிங்கப்பூர், புருணை ஆகிய மூன்று நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்திருந்தது. கொரோனா தொற்றினால் அந்தச் சலுகையை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருந்தது. கொரோனா தொற்றுக்குப் பின்னர் புருணை, சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்கு  மட்டும் மீண்டும் அத்தகைய அனுமதியை சீனா அளித்தது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கும், மலேசியாவிற்கும் அந்த சலுகையை தற்போது சீனா வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் சீனாவிற்குள் 15 நாள்கள் விசா இல்லாமல் தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சோதனை முயற்சி ஒரு வருடத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் பரிமாற்றத்தில் வளர்ச்சி மற்றும் வெளி உலகிற்கான உயர்மட்டத் திறப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என அந்நாட்டு வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்குள் நுழைபவர்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்தது. அந்தக் கட்டுப்பாடு இந்த ஆண்டின் துவக்கத்தில் தளர்த்தப்பட்ட நிலையில், சீனா இந்த ஆறு நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி அளித்துள்ளது.

சீனா
சீனாStefan Fussan

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் 40 லட்சம் மக்கள் சீனாவிற்குள் வந்து சென்றுள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனா இப்போது தனது மந்தமான பொருளாதாரத்தை சரி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. அண்மையில் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் போன்ற பெரிய முதலீட்டாளர்கள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்க சீனாவுக்கு வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in