அடைக்கலம் தேடும் அனைவருக்கும் அபயம் அளிக்குமா ஐரோப்பா?

ஆசியர்கள், ஆப்பிரிக்கர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகப் புகார்
அடைக்கலம் தேடும் அனைவருக்கும் அபயம் அளிக்குமா ஐரோப்பா?

போரின் பின்விளைவுகளில் மிக முக்கியமானது அகதிகள் பிரச்சினை. வாழ்விடத்தையும் வருமானத்தையும் சொத்துக்களையும் இழந்து பசியும் தாகமுமாகக் குழந்தைகளுடன் ஏராளமானோர் புகலிடம் தேடி அலையும் அவலம்தான் போரால் மக்களுக்குக் கிடைக்கும் பரிசு!

தற்போது உக்ரைனில் நடந்துவரும் போரில் அகதிகள் பிரச்சினை ஐரோப்பிய நாடுகளுக்குச் சுமையாக மாறவிருக்கிறது. அதேவேளையில், உக்ரைனியர்களுக்கு அந்நாடுகள் மனமுவந்து உதவுகின்றன. போர்களால் சீர்குலைந்த சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அபயம் தேடி வந்த அகதிகளுக்கு அனுமதி மறுத்த நாடுகள்கூட இப்போது உக்ரைனியர்களுக்கு அடைக்கலம் தர கதவு திறந்திருக்கின்றன. “ரஷ்யாவின் வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பித்து வரும் யாருக்கும் போலந்து ஆதரவளிக்கும் என அந்நாட்டின் உள் துறை அமைச்சர் மாரியுஸ் காமின்ஸ்கி கூறியிருக்கிறார். அமெரிக்காவும் உக்ரைனியர்களுக்கு அடைக்கலம் தரத் தயாராகியிருக்கிறது. அதேவேளையில், பலரும் ஐரோப்பிய நாடுகளிலேயே தங்கியிருந்துவிட்டு, போர் முடிந்ததும் உக்ரைன் திரும்ப நினைத்திருக்கிறார்கள் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி கூறியிருக்கிறார்.

இதுவரை அந்நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக போலந்து, ருமேனியா, ஹங்கேரி, செக் குடியரசு, மால்டோவா போன்ற அண்டை நாடுகளிடம் தஞ்சமடைந்திருப்பதாக அகதிகளுக்கான ஐநா ஆணையம் கூறியிருக்கிறது. 20 மில்லியன் டாலர் தொகையை உக்ரைனுக்கு உடனடியாக வழங்கவும் ஐநா முடிவெடுத்திருக்கிறது. உக்ரைனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் அரசுப் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதக் குழுக்களுக்கும் இடையே , பல மாதங்களுக்கு முன்பிருந்தே வன்முறை சம்பவங்கள் நடந்துவருவதால் அமெரிக்காவின் தரப்பில் அங்குள்ள மக்களின் உதவிக்காக 52 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் இருக்கும் இன்னொரு பிரச்சினை, உக்ரைனியர்கள் அல்லாத வேறு நாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் மறுக்கப்படுவதுதான். உக்ரைனிலிருந்து போலந்து செல்ல முயன்ற இந்திய மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதேநிலைதான் ஆப்பிரிக்க தேசத்தவருக்கும் அங்கே ஏற்பட்டிருக்கிறது. பல ஆப்பிரிக்கர்கள் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்த காணொலிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

அமெரிக்காவில் வசிக்கும் உக்ரைனியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு, குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு தற்காலிக அடைக்கலம் (டிபிஎஸ்) எனும் ஏற்பாடு ஏற்கெனவே உள்ளது. அந்த அடைக்கலத்துக்கான காலக்கெடு முடிந்ததும் அவர்கள் அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். தற்போது உக்ரைனில் போர் நடந்துவருவதால், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்களா என்பது முக்கியக் கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது தொடர்ந்து அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்களா எனும் கேள்விக்கு அமெரிக்க அரசு இன்னமும் உறுதியான பதிலைச் சொல்லவில்லை.

இந்தப் போர் நீடித்தால் ஏறத்தாழ 40 லட்சம் பேர் அகதிகளாவார்கள் என ஐநா மனித உரிமை ஆணையம் கணித்திருக்கிறது. அப்படியான அவலச் சூழல் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என நம்புவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in