புதிய பொருளாதாரத் தடைகள்; உள்நாட்டில் எதிர்க்குரல்கள்: புதின் எதிர்கொண்டிருக்கும் பெரும் சவால்!

புதிய பொருளாதாரத் தடைகள்; உள்நாட்டில் எதிர்க்குரல்கள்: புதின் எதிர்கொண்டிருக்கும் பெரும் சவால்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக போர்க்கால அணிதிரட்டலுக்கு உத்தரவிட்டிருக்கிறது ரஷ்ய அரசு. அதன்படி 3 லட்சம் ரிசர்வ் வீரர்களைப் போருக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, அணு ஆயுத மிரட்டலையும் விடுத்திருக்கிறது. புதினின் இந்நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் மட்டுமல்லாமல், ரஷ்ய மக்களில் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக ரஷ்யாவுக்குக் கடுமையான பதிலடி கொடுத்து, சில முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டிருக்கிறது. இதையடுத்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை புதின் நேற்று வெளியிட்டார். உக்ரைனின் நிலப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது, ஏற்கெனவே போர் பயிற்சி பெற்ற வீரர் 3 லட்சம் வீரர்களைப் போர் முனைக்கு அனுப்புவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ரஷ்யாவின் தற்காப்புக்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை என்றும் எச்சரித்தார்.

இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இது புதினின் பீதியையும் விரக்தியையும் வெளிக்காட்டுவதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்திருக்கிறார்.

ஐநா பொதுச் சபையில், நேற்று பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதினின் அணு ஆயுத மிரட்டலைக் கண்டித்ததுடன், ஐநா சாசனத்தை மீறும் வகையில் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐநா பொதுச் சபையில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்யா நிகழ்த்தும் போர்க் குற்றங்களுக்குத் தண்டனை அளிப்பது, உக்ரைன் மக்களின் உயிரைக் காப்பாற்றுவது, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீட்டெடுப்பது, தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்திப் பேசினார்.

புதினின் அறிவிப்புகளுக்கு, தற்போது சிறையில் இருக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அத்துடன், மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட 38 ரஷ்ய நகரங்களில் 1,300-க்கும் மேற்பட்டோர் புதினின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடியதால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ரஷ்யாவின் நட்பு நாடான வட கொரியா, அந்நாட்டுக்கு இதுவரை ஆயுதங்கள் வழங்கியதில்லை என்றும், இனிமேலும் அப்படியான திட்டம் இல்லை என்றும் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சூழலில், புதின் மீதும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் மீதும் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகிவருகின்றன.

215 உக்ரைன் போர்க் கைதிகளை விடுவித்திருப்பது உள்ளிட்ட மிகச் சில நடவடிக்கைகள் மூலம் சற்றே நம்பிக்கையூட்டும் ரஷ்யா, மற்ற விஷயங்களில் முன்பைவிட மோசமான நடவடிக்கைகளில் இறங்குவது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

இதற்கிடையே, உக்ரைன் மண்ணில் தங்கள் சொந்த நாட்டு வீரர்கள் நிகழ்த்தும் அட்டூழியங்கள் குறித்து, ரஷ்ய வீரர் ஒருவர் பேசும் காணொலி வைரலாகியிருக்கிறது. “உள்ளூர் மக்கள் எங்களை வெறுக்கிறார்கள். உள்ளூர்ப் பெண்களை எங்கள் படையினர் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்” எனக் குமுறுகிறார் அந்த வீரர். உக்ரைனில் ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு இது போன்ற அட்டூழியங்களே முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in