ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்தைக் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்: போரை நிறுத்துவாரா புதின்?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்தைக் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்: போரை நிறுத்துவாரா புதின்?

ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யில் 90 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டால் ஹங்கேரியின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பன் ஆட்சேபம் தெரிவித்துவந்தார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது.

உக்ரைன் மீதான தாக்குதலில், ரஷ்யாவுக்கு முக்கிய நிதி மூலமாக இருப்பது ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதிதான். எனவே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைப் பெருமளவில் நிறுத்திக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்திருப்பது ரஷ்யாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுவருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐநா ஆகியவற்றுடன் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும் அந்நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரவே செய்கிறது.

எனவே, அதற்கு மாற்று வழிகளைக் கண்டறிந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை உக்ரைன் முன்வைத்துவருகிறது. கூடவே, ரஷ்யா விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் மென்மையான போக்கைக் கொண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி விமர்சித்துவருகிறார்.

ரஷ்யாவின் எண்ணெய்யைச் சார்ந்திருக்கும் நிலை அமெரிக்காவுக்கு இல்லை என்பதால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது. சலுகை விலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவையும் அமெரிக்கா அவ்வப்போது கண்டிக்கவே செய்கிறது. இந்தச் சூழலில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று நடந்த ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் ஒப்பந்தம் நிறைவேறிவிட்டது. இது ரஷ்யாவிலிருந்து மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும். இதன் மூலம் ரஷ்யாவின் போர் இயந்திரத்துக்குக் கிடைக்கும் பெரும் நிதி குறைக்கப்படும். இது போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும்’ என்று கூறியிருக்கிறார்.

மூன்றில் இரண்டு பங்கு ரஷ்ய எண்ணெய், டேங்கர்கள் மூலமும் த்ரூஸ்பா எண்ணெய்க் குழாய் மூலமும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. போலந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்த ஆண்டின் இறுதியில் நிறுத்திக்கொள்ளவிருக்கின்றன. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா இழக்கும்.

ஹங்கேரி, ஸ்லோவாகியா, செக் குடியரசு ஆகிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைப் பெருமளவு சார்ந்திருக்கின்றன. எனவே, மீதமுள்ள 10 சதவீத இறக்குமதி அந்நாடுகளுக்குக் கிடைக்கும்.

ஏற்கெனவே பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு சமாளித்துவரும் ரஷ்யா, எண்ணெய் ஏற்றுமதியில் மேலும் சரிவைச் சந்தித்தால் தொடர்ந்து உக்ரைன் போரை நடத்த முடியாது. ஒருகட்டத்தில் போரை நிறுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படலாம். ஆனால், புதின் அதை பொருட்டாக எடுத்துக்கொள்வாரா என்பதுதான் விவாதத்துக்குரிய கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in