10 லட்சத்துக்கும் மேல் சிறார் தொழிலாளர்கள்: அவல நிலையில் ஆப்கன்!

10 லட்சத்துக்கும் மேல் சிறார் தொழிலாளர்கள்: அவல நிலையில் ஆப்கன்!

தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு உலக நாடுகளின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதவிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியில் நடைபெற்றுவந்த பணிகள், முடங்கிவிட்டதால் பெரும்பாலானவர்கள் பார்த்துவந்த வேலைகளையும், வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளையும் இழந்துவிட்டனர். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது அதன் செலவுகளில் பெரும்பகுதி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்துதான் கிடைத்தது. இப்போது அது முற்றாக வற்றிவிட்டது. உள்நாட்டில் வேலையும் வருமானமும் இல்லாததால் பண சுழற்சியும் இல்லை. விலைவாசி உயர்வாலும் வாங்குவதற்குப் பணம் இல்லாததாலும் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

குடும்பங்கள் மீள வழி தெரியாமல் திகைக்கின்றன. கிடைக்கும் எடுபிடி வேலைகளுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது அனுப்புகின்றனர்.

அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

பிரிட்டனைச் சேர்ந்த ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற தன்னார்வ அமைப்பு ஆப்கனின் ஏழு மாநிலங்களில் 1,400 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தியது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட, 18 வயதுக்குக் குறைவான ஆண் – பெண் குழந்தைகள் எடுபிடி வேலைகள் உள்ளிட்டவற்றுக்கு குடும்பத்தால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 82 சதவீத குடும்பங்கள் வருமானம் இழந்துவிட்டன. தாலிபான்களால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. தங்களுடைய நிபந்தனைகளுக்கு தாலிபான்கள் உடன்பட்டால் முடக்கிய நிதியை விடுவிக்கத் தயார் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிபந்தனை விதிக்கின்றன. உண்மையில், ஆப்கானிஸ்தானுக்கு உரிய நிதியை விடுவித்தால்கூட நிலைமை மாறிவிடாது. முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அளித்த நிதியுதவியையும் சேர்த்து வழங்கினால்தான் பொருளாதாரச் சக்கரங்கள் சுழல முடியும்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஏற்படுவதை ஆதரித்த சீனா, பாகிஸ்தான் நாடுகள் அந்நாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் எண்ணத்தில் இல்லை. ஆப்கானிஸ்தான் அரசில் வேலை பார்ப்பவர்களே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊதியம் இல்லாமல் வாடுகின்றனர். வீடுகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மட்டுமல்லாமல் பண்ட பாத்திரங்களைக்கூட மக்கள் விற்றுவருகின்றனர். செலவுக்குப் பணம் இல்லாததால், பண்டமாற்று அடிப்படையில் கோதுமை மாவு, பருப்புகளை வாங்கிக்கொள்கின்றனர். கடைகளில் சரக்குகள் இருக்கின்றன. ஆனால் மக்களிடம் வாங்கும் சக்தி வற்றிவிட்டதால் பட்டினி கிடக்கின்றனர்.

பிரிட்டன் தன்னார்வ அமைப்பு பேட்டி கண்டவர்களில் 36 சதவீதம் பேர், தெரிந்த கடைகளில் கடன் சொல்லிவிட்டு வாங்கிச் சமாளிப்பதாகத் தெரிவித்தனர். 8 சதவீதம் பேர் அறக்கட்டளைகள் தரும் உணவை வாங்கிச் சாப்பிடுவதாகவும், அது கிடைக்காதபோது பிச்சை எடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆறு மாதங்களாக காய்ந்த ரொட்டியைத் தவிர வேறு எதையும் சாப்பிட முடியாத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் நோயுற்று மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய நிதியில் முடக்கப்பட்ட தொகை மட்டுமே 1,000 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும். இதில் 700 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேல் அமெரிக்க மத்திய வங்கியால் முடக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையில் சரி பாதியை - அதாவது 3.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை விடுவிப்பதாகவும் எஞ்சிய தொகையை அமெரிக்கா மீது இரட்டைக் கோபுரம் தாக்குதலின்போது தாலிபான்கள் நிகழ்த்திய சேதத்துக்கு ஈடாக நிறுத்திக்கொள்வதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்திருக்கிறார். இது மனிதாபிமானமற்றது, நியாயமற்றது என்று முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் கண்டித்திருக்கிறார். தலிபான்கள் செயலுக்காக ஆப்கான் மக்களிடம் அபராதம் வசூலிப்பது சரியல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தவிர புதிதாக நிதியுதவியோ வேறு உதவிகளோ செய்வதாக மேற்கத்திய நாடுகள் கூறவில்லை. ஆப்கானிஸ்தானின் அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை ஏற்படுத்த வேண்டும், ஆப்கானியப் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படக் கூடாது, பெண்கள் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் உரிமைகள் தரப்பட வேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய நாடுகள் நிபந்தனை விதிக்கின்றன. எங்களுடைய பணத்தைத் தர எங்களுக்கு நிபந்தனை விதிக்க நீங்கள் யார் என்று தாலிபான்கள் கேட்கின்றனர்.

ஆப்கானிஸ்தான மக்களின் நிலைமை நாளுக்கு நாள் பரிதாபமாகிக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மக்கள் மீது சர்வதேச சமூகத்துக்கும் கருணை இல்லை என்றால் தாலிபான்களுக்கும் இரக்கமில்லை. கடந்த காலத் தவறுகளுக்காக மக்களைத் தேடித்தேடி அவை சித்திரவதை செய்கின்றனர். இதில் குழந்தைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாகிவிட்டது. சிறு குழந்தைகளுக்கு வேலைகள் செய்து பழக்கம் இல்லை. அதுவும் சரியான சோறு இல்லாமல் வாடிய நிலையில் இரட்டைத் தண்டனையாக இந்த வேலைவாய்ப்பு இருக்கிறது. மனிதம் மாய்ந்து கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான் மண்ணில். உலகத்தின் இதயம் கல்லாகிக்கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.