சமகால அவலம்: உக்ரைன் போரால் உருக்குலையும் சுற்றுச்சூழல்!

சமகால அவலம்: உக்ரைன் போரால் உருக்குலையும் சுற்றுச்சூழல்!

போர்கள் கொடூரமானவை. மனிதகுலத்துக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் தீங்கிழைப்பவை. ஒன்பது மாதங்களாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து வெளியாகியிருக்கும் செய்திகள் இதைப் பட்டவர்த்தனமாக நிரூபிக்கின்றன.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சித்ததால், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது பிப்ரவரி 24 முதல் தாக்குதல் நடத்திவருகிறது. இந்தப் போரில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்காகவே இருக்கும் என்கிறார்கள். லட்சக்கணக்கானோர் அகதிகளாகியிருக்கின்றனர்.

இந்த இழப்புகளையெல்லாம் தாண்டி சுற்றுச்சூழலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் போர்.

போரின் ஆரம்பகட்டத்தில், தலைநகர் கீவுக்குள் ரஷ்யப் படைகள் நுழைவதைத் தடுக்க இர்பின் நதி குறுக்கே உள்ள பாலம் ஒன்றை உக்ரைன் படைகளே தகர்த்தன. இதனால், அந்த ஆற்றின் கரையில் இருந்த பகுதிகள் வெள்ளக்காடாகின. அதுமட்டுமல்ல, போர் காரணமாக சில வாரங்களிலேயே அந்த ஆறு மாசடைந்துவிட்டது. அருந்த முடியாத அளவுக்கு அது அசுத்தமாகிவிட்டது. இதனால் குடிநீராக அதைப் பயன்படுத்திவந்த மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனர்.

அதேபோல், மின்னுற்பத்தி நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்கள், அணுசக்தி நிறுவனங்கள் என ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் உக்ரைனின் பல நகரங்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. பல இடங்களில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 60 லட்சம் பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். குடியிருப்புப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளும் தோல்வியடைந்தன. அதுமட்டுமல்ல, 6.92 லட்சம் ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டிருப்பதாக உலக வன உயிர் நிதியம் கூறியிருக்கிறது. பயிர்களும், கால்நடைகளும் தீயில் கருகியதால் பல மில்லியன் டாலர் இழப்பை உக்ரைனியர்கள் சந்தித்திருக்கிறார்கள். மொத்தமாக, சுற்றுச்சூழலில் இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கும் இழப்பின் மதிப்பு 37 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 2.9 லட்சம் கோடி ரூபாய்.

கீவ் அருகே உள்ள கலினிவ்கா நகரில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில், எரிபொருள் கிடங்கு சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் போரினூடே, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் தொழில் நிறுவனங்கள் நிறைந்தவை. அங்கு இரு தரப்புக்கும் இடையில் நிகழ்ந்த சண்டையில் பல தொழிற்சாலைகள் சேதத்துக்குள்ளாகின.

சுத்தமான குடிநீர் இல்லாதது, காற்றில் கலந்திருக்கும் மாசுகள் எனக் கொடும் சூழலில் தவித்துவரும் உக்ரைனியர்களில் பலர் தோல் நோய்கள் தொடங்கி சுவாசப் பிரச்சினைகள் வரை பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகியிருக்கின்றனர். நிலத்தடி நீர் மாசுபாடு, பல்லுயிர்ச் சூழல் சீர்கேடு என அளவிட முடியாத பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இவற்றை அத்தனை எளிதில் சரிசெய்ய முடியாது. இனிவரும் தலைமுறையினர் வனப்பகுதிகளை மீண்டும் செழிக்கச் செய்ய வேண்டியிருக்கும். மாசடைந்த நதிகளைச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கும். இதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும் என்பதுதான் விஷயம். போர் ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட உதாரணங்கள் தேவையா என்ன?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in