ஜோ பைடனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு விரையும் ரிஷி சுனக்... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 13வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இஸ்ரேல் தரப்பில் பதிலடியாக தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி காஸா பகுதியில் போரைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, காஸாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலகையே அதிர வைத்துள்ள இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்தையும், அமெரிக்கா உறுதி செய்யும் எனவும் காஸா மற்றும் மேற்குக் கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அளிக்கும் என்றும் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உருக்குலைந்து போயுள்ள காஸா
உருக்குலைந்து போயுள்ள காஸா

இந்நிலையில் ஜோ பைடனைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு இன்று செல்கிறார். அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் இசாக் ஹெர்சோக் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பொதுமக்களின் ஒவ்வொரு உயிர் பறி போவது கொடூரமானது. ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலால் பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன” என்று கூறியிருந்தார். இந்த பயணத்தின் போது காஸாவில் மனிதாபிமான வழித்தடத்தை திறக்க வேண்டும் எனவும், காஸாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து நாட்டினரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in