புதினுக்கு விட்ட சவால்... புதிய பெயர் சூட்டிக்கொண்ட ஈலான் மஸ்க்!

புதினுக்கு விட்ட சவால்... புதிய பெயர் சூட்டிக்கொண்ட ஈலான் மஸ்க்!
‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் ஈலான் மஸ்க்

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் ஈலான் மஸ்க், ரஷ்ய அதிபர் புதினுக்கு விட்ட சவாலின் விளைவாக ட்விட்டரில் தனது பெயரை ‘ஈலானா மஸ்க்’ என மாற்றிய நிகழ்வு, சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

பிப்ரவரி 24-ல் ரஷ்யப் படைகள் உக்ரைனை ஊடுருவத் தொடங்கியது முதல், அந்நாட்டுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துவருபவர் ஈலான் மஸ்க் (எலான் மஸ்க் எனப் பொதுவாகத் தமிழ் ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறார்). அது மட்டுமல்லாமல், போருக்கு மத்தியில் உக்ரைனின் இணையச் சேவை பாதிக்கப்படாமல் இருக்க தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை அந்நாட்டுக்கு வழங்கிவருகிறார் ஈலான் மஸ்க். சமீபத்தில் அவருடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

தனது நிறுவனத்தின் சாதனைகள் குறித்து எழுதும் ட்விட்டர் பதிவுகளுக்கு நடுவே, உக்ரைனுக்கு ஆதரவான பதிவுகளையும் தொடர்ந்து எழுதிவருகிறார் ஈலான் மஸ்க். போருக்கு எதிராக நிற்கும் ரஷ்யர்களையும் பாராட்டியிருக்கிறார்.

இந்நிலையில், மார்ச் 14-ல் வெளியிட்ட ட்வீட்டில், ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு சவால் விடுத்திருந்தார். செச்சன்யா குடியரசின் ஆட்சியாளர் ரமஸான் கடிரோவ் இதற்கு எதிர்வினையாற்றியிருந்தார். புதினின் ஆதரவாளரான ரமஸான் கடிரோவ், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகத் தனது படைகளும் பங்கெடுத்திருப்பதாக அறிவித்தவர்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சர்வதேச என்ஜிஓ-க்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ககாசஸில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் ஈலான் மஸ்க் தன்னை புதினுடன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

பலவீனமான உங்களை எளிதில் புதின் வென்றுவிடுவார் என்றும் கிண்டலடித்த ரமஸான் கடிரோவ், செச்சன் குடியரசில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டால், புதினுடன் சண்டை செய்ய வலிமை பெறலாம் என்றும் ஆலோசனை தெரிவித்திருந்தார். ரஷ்ய சிறப்புப் படை பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியையும் ஈலான் மஸ்க் பெறலாம் எனக் கூறியிருந்தார். மேலும், “செச்சன்யா குடியரசிலிருந்து முற்றிலும் வேறு நபராகத் திரும்புவீர்கள் ஈலான், அதாவது ஈலானா” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரமஸான் கடிரோவ்
ரமஸான் கடிரோவ்

ரமஸானின் இன்ஸ்டாகிராம் பதிவை ட்விட்டரில் வெளியிட்டு எதிர்வினையாற்றிய ஈலான் மஸ்க், “வாய்ப்புக்கு நன்றி. ஆனால், அப்படியான சிறந்த பயிற்சி எனக்குக் கூடுதலான அனுகூலத்தைக் கொடுக்கும். ஒருவேளை சண்டைக்கு புதின் பயப்படுகிறார் என்றால், எனது இடதுகையை மட்டும் பயன்படுத்த சம்மதிப்பேன். இத்தனைக்கும் நான் இடதுகை பயன்பட்டாளன் அல்ல” என்று எழுதியதுடன், தனது பெயரை ‘ஈலானா’ என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அவரது பதிவுக்கு ஏராளமான பின்னூட்டங்கள் வந்தன. அவற்றில் ஒரு ட்விட்டர்வாசி, “உங்கள் ட்விட்டர் ப்ரொஃபைல் பெயரை சில நாட்களுக்கு ஈலானா என்று மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அது வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கருத்து என்றாலும், தனது ட்விட்டர் பெயரை ‘ஈலானா மஸ்க்’ என்று நிஜமாகவே மாற்றிக்கொண்டுவிட்டார் மஸ்க்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in