பிட்காயினை அங்கீகரிக்கும் எல் சால்வடார்: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

பிட்காயினை அங்கீகரிக்கும் எல் சால்வடார்: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணயத்தைப் பற்றிய சந்தேகங்களும் தயக்கங்களும் உலகின் பல நாடுகளில் நிலவும் சூழலில், மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார், அதிகாரபூர்வ செலாவணியாக அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிட்காயினை ஏற்கும் முதல் தேசமாகிறது எல் சால்வடார். இதற்காகக் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறது, அதிபர் நயீப் புகேலே தலைமையிலான எல் சால்வடார் அரசு.

பிட்காயினை அங்கீகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எல் சால்வடார் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதையடுத்து அதிபரை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றனர். 60 வயதைக் கடந்த நீதிபதிகளும், தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் நீதித் துறையில் பணியாற்றியவர்களும் பதவியிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற சட்டத்தை அதிபர் கொண்டுவந்திருப்பது, நீதித் துறையின் மீதான தாக்குதல் என்று அத்துறையினர் கண்டிக்கின்றனர். தண்ணீரைத் தனிமையுடைமையாக்கும் அரசின் முடிவுக்கு எதிராகத் தொழிற்சங்கத்தினரும் எதிர்க்குரல் எழுப்புகின்றனர். தனியாரிடம் நீர்நிலைகளை ஒப்படைத்தால், ஏழைகளுக்கு இலவச தண்ணீர் கிடைக்காது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே
எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே

இந்நிலையில், அதிபர் புகேலேவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் சான் சால்வடாரில் திரண்டு, நேற்று (அக்.17) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகளிர் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். “பிட்காயின் என்பதே மோசடி – அதை நாட்டின் செலாவணியாக அறிவிப்பதா?”, “சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம் - ஜனநாயகம் தொடர்பாக பேரம் பேசமாட்டோம், அதைக் காக்கப் போராடுவோம்”, “போதும் உங்கள் ஆணவ ஆட்சி” என்ற முழக்கங்களைப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து எழுப்பினர்.

பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளை எடுக்காமல், பிட்காயினை அதிகாரபூர்வ செலாவணியாக ஏற்பது மோசமான முடிவு என்று அவர்கள் கண்டித்தனர்.

நாட்டின் ஜிடிபியில் 22 சதவீதம் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் செலாவணி மூலம் கிடைக்கிறது. எனவே அமெரிக்க டாலரை விட்டுவிட்டு, பிட்காயினை அதிகாரபூர்வச் செலாவணியாக ஏற்பதை மக்கள் கண்டிக்கின்றனர்.

எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த 23.5 லட்சம் பேர் இப்போது அமெரிக்காவில் குடியேறி வேலை பார்க்கின்றனர். அவர்கள் மாதந்தோறும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பும் பணம் மிகப் பெரிய வரவாக இருக்கிறது. இதனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது அதிகம் - ஏற்றுமதிகள் குறைவு என்றாலும் அந்த வர்த்தகப் பற்றாக்குறையை இட்டு நிரப்பும் அளவுக்கு அமெரிக்க டாலர்கள் கிடைக்கின்றன. நாட்டின் ஜிடிபியில் 22 சதவீதம் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் செலாவணி மூலம் கிடைக்கிறது. எனவே அமெரிக்க டாலரை விட்டுவிட்டு, பிட்காயினை அதிகாரபூர்வச் செலாவணியாக ஏற்பதை மக்கள் கண்டிக்கின்றனர்.

பிட்காயினின் மதிப்பை அரசுகள் தீர்மானிப்பதில்லை. இந்த நிலையில், 3 பிட்காயின்களை அரசுக்குச் செலுத்துவோருக்கு எல் சால்வடார் குடியுரிமை வழங்கப்படும் என்று வேறு அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க டாலர்தான் எல் சால்வடாரின் அதிகாரபூர்வ செலாவணியாகவே இருந்தது. டாலர்களாக அனுப்பும் பணத்துக்கு சேவைத் தொகையாக 4,000 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. பிட்காயினுக்கு அது கிடையாது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

அதிபர் புகேலே இந்த ஆர்ப்பாட்டத்துக்கெல்லாம் அஞ்சவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நிகழ்ச்சியின்போது, அவர்களுக்கு ஆதரவு அளிக்க மறுத்த முதியவரைக் கீழே தள்ளியதையும், தங்களுக்கு ஆதரவாக வரமறுத்த வழிப்போக்கர்களை வசைமாரி பொழிந்ததையும் காணொலிக் காட்சிகள் மூலம் நாட்டுக்குத் தெரிவித்தார். ட்விட்டரில் தன்னை, ‘எல் சால்வடார் சக்ரவர்த்தி’ என்று கேலியாக அடையாளப்படுத்திக்கொண்டார். கடந்த மாதம் அவரே, ‘சர்வாதிகாரி புகேலே’ என்று அரசியல் எதிராளிகள் தன்னைக் குற்றம்சாட்டுவதைக் கொண்டு அடையாளப்படுத்தியிருந்தார்.

க்ரிப்டோ கரன்ஸியான பிட்காயினைப் புழக்கத்துக்குக் கொண்டுவருவதற்கு முன்னர், தொழில்நுட்ப ரீதியிலான ஏற்பாடுகளை புகேலே அரசு செய்யாதது கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. திட்டமிடாமல் எடுக்கப்படும் இதுபோன்ற முடிவுகள், பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், தன்னிச்சையாக இப்படியான முடிவுகளை எடுக்கும் ஆட்சியாளர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்பதுதான் விநோதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in