சமையல் எண்ணெய் விலை குறைப்பு: தொடர்கிறதா தீபாவளி பரிசு?

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை
சமையல் எண்ணெய் விலை குறைப்பு: தொடர்கிறதா தீபாவளி பரிசு?
சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெயின் விலை குறைவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி சமையல் எண்ணெயின் சந்தை விலை, கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.25 வரை குறைய வாய்ப்புள்ளது.

கரோனா முதல் அலைக்குப் பின்னர் விலையேற்றம் என்பது, சகலத்திலும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கட்டுப்பாடின்றி இந்த விலைகள் அதிகரித்ததில் நடுத்தர மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். அதிலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் விலை மேலும் உயர்த்தப்பட்டது.

எண்ணெய் உற்பத்தியாளர்கள் மத்தியில் இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. கரோனோ முடக்கத்தை தொடர்ந்து பொதுவாக அதிகரித்த விலையேற்றம் மட்டுமன்றி, சர்வதேச அளவில் எண்ணெய் வித்துகள் மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடும் குறிப்பிடத்தக்க காரணமாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்தோனேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோலிய எரிபொருட்களை குறைக்கும் நோக்கில், தாவரங்களிலிருந்து எரிபொருட்களை உருவாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து வருகின்றன. இதனால், அந்நாடுகளின் சமையல் எண்ணெய்க்கான கச்சாப் பொருள் ஏற்றுமதி குறைந்தது. இதனால், சர்வதேச சந்தையில் எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடும், அதையொட்டிய விலையேற்றமும் நிலவத் தொடங்கியது.

இவற்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இறக்குமதி வரி, வேளாண் பொருட்களின் செஸ் வரி உள்ளிட்டவற்றை குறைக்க உத்தரவிட்டது. அவற்றுக்கேற்ப சில்லறை விற்பனைக்கான சமையல் எண்ணெயின் விலையை குறைத்து அறிவிக்குமாறும், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை தொடர்ந்து மத்திய அரசின் தீபாவளி பரிசுகள், சமையல் எண்ணெய் குறைப்பின் மூலமாக தொடர்கின்றன. பணவீக்கத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள், வேறுபல விலைகுறைப்புகள் வாயிலாகவும் தொடர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசின் தீபாவளி பரிசு மழை தொடரட்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in