
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலையை அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
துருக்கியில் நேற்று மூன்று முறை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியை தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகின. சிரியாவில் பாதிப்பு சற்றே குறைவாக இருந்தாலும், துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் இருந்த 2,200 ஆண்டுகள் பழமையான காசியண்டெப் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும் நிலநடுக்கத்தால் தரைமட்டமாகியுள்ளன.
இந்த நிலையில், துருக்கி அதிபர்ரெசெப் தையிப் எர்டோகன் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்காக இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், " துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 10 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு இந்த அவசர நிலை நிலவும். அப்போதுதான் மீட்புப் பணிகளை எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுத்த முடியும். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிதியுதவியும் செய்யப்படும்" என்றார்.
அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் பிறப்பித்துள்ள இந்த அவசர நிலை, மே 14-ம் தேதி வரை நீடிக்கும். கடந்த 20 ஆண்டுகளாக அதிபர் பதவியில் எர்டோகன் உள்ளார். துருக்கியில் மே மாதம் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலையை அதிபர் பிரகடனம் செய்துள்ளார்.
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு சதி நடந்த போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது கடந்த. 2 ஆண்டுகளுக்கு அது அமலில் இருந்த நிலையில் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது நிலநடுக்க பேரழிவை அடுத்து அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.