பெருந்தொற்றுக்குப் பிறகான ஐநா பொதுச் சபைக் கூட்டம்: 160 நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்பு!

பின்னணியும் முக்கியத்துவமும்
பெருந்தொற்றுக்குப் பிறகான ஐநா பொதுச் சபைக் கூட்டம்: 160 நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்பு!

கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர், வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா பொதுச் சபையில் உலக நாடுகளின் தலைவர்களும் நேரடியாகப் பங்கேற்கவிருக்கிறார்கள். பெருந்தொற்று இன்னமும் முழுமையாக முடிவுக்கு வராத சூழலில், ஏறத்தாழ 160 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் பெறுகிறது.

2019 இறுதியில் கரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பின்னர் உலக நாடுகள், சர்வதேச அமைப்புகள் என எல்லாவற்றிலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 2020 செப்டம்பரில், நியூயார்க்கில் உள்ள தலைமையகத்தில் நடந்த வருடாந்திர ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. 75 ஆண்டுகால ஐநா வரலாற்றில் நேரடியாகத் தலைவர்கள் பங்கேற்காதது அதுவே முதல் முறை.

ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் ஏற்கெனவே உரை நிகழ்த்தி பதிவுசெய்யப்பட்ட காணொலிக் காட்சிகள் அந்தக் கூட்டத்தில் திரையிடப்பட்டன. அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் அதற்கான அறிமுக உரையை வழங்கினர். 2021 செப்டம்பர் மாதம் நடந்த ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பல நாடுகளில் பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததால் பல தலைவர்கள் நேரடியாகவே கூட்டத்தில் பங்கேற்றனர். கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த 72 நாடுகளின் தலைவர்களின் உரைகள் பதிவுசெய்யப்பட்டு காணொலி மூலம் திரையிடப்பட்டன.

இந்நிலையில், இந்த முறை ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட காணொலிகளைத் திரையிடும் முறை கிடையாது என ஐநா பொதுச் சபையின் செய்தித் தொடர்பாளர் பொலீனா குபியாக் நேற்று (ஜூலை 19) தெரிவித்தார். மாறாக, 157 நாடுகளின் தலைவர்கள் நேரடியாகவே கலந்துகொள்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோருடன் ஈரான், பிரான்ஸ், பிரேசில், கொலம்பியா என104 நாடுகளின் தலைவர்கள் இதில் உரையாற்றுகிறார்கள். ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் உக்ரைனின் அதிபர் ஸெலன்ஸ்கியும் நேரடியாக இக்கூட்டத்தில் பங்கேற்கிறார். உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் கண்டனத்துக்கும் பொருளாதாரத் தடைகளுக்கும் ஆளாகியிருக்கும் ரஷ்யாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறது. ஆனால், ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ள மாட்டார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in