
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தீபாவளி தின பரிசாக, விராட் கோலி கையொப்பமிட்ட பேட் மற்றும் விநாயகர் சிலை ஆகியவற்றை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கினார்.
அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஆகியோர் நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோரை பிரதமர் இல்லத்தில் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு விநாயகர் சிலை ஒன்றையும், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் அவர் வழங்கினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ”அமைச்சர் ஜெய்சங்கரை இங்கிலாந்து பிரதமர் இல்லத்திற்கு வரவேற்கிறோம். தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பயணத்தின் போது அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளவர்லியை வருகிற 15ம் தேதி சந்தித்து பேச உள்ளார். மேலும் பல்வேறு அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே சுதந்திரமான வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்து இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.