‘ஐரோப்பா பார்த்திராத கோரமான போர்’ - டோன்பாஸ் யுத்தம் குறித்து பதற்றம் பகிரும் ஸெலன்ஸ்கி

‘ஐரோப்பா பார்த்திராத கோரமான போர்’ - டோன்பாஸ் யுத்தம் குறித்து பதற்றம் பகிரும் ஸெலன்ஸ்கி

டோன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள சியாவெராடோனெட்ஸ்க் நகரில் நடந்துவரும் போர், ஐரோப்பா இதுவரை கண்டிராத கோரமான யுத்தமாக நினைவுகூரப்படும் என்று வேதனை தெரிவித்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்க்ஸி.



உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான சியாவெராடோனெட்ஸ்க்கைக் கைப்பற்றுவதிலும் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் தொழிற்சாலைகள் நிறைந்த டோன்பாஸ் பிராந்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர ரஷ்யா முயற்சிக்கிறது. சியாவெராடோனெட்ஸ்க் முற்றுகை குறித்து கடந்த வாரம், உக்ரைன் மக்களிடம் தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய அதிபர் ஸெலன்ஸ்கி போரின் மிகக் கடினமான தருணம் இதுதான் எனக் கூறியிருந்தார்.

உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்னர் சியாவெராடோனெட்ஸ்க் நகரிலும் அதன் அருகில் உள்ள லிஸிசான்ஸ்க் நகரிலும் சேர்த்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவந்தனர். தற்போது அங்கு மொத்தம் 15,000 பேர்தான் எஞ்சியிருக்கின்றனர். பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏராளமானோர் அகதிகளாகியிருக்கிறார்கள். ரஷ்ய அதிபர் புதின் மூலம் தங்கள் பகுதியில் அமைதி திரும்பும் என்று காத்திருந்த மக்கள் இந்தப் போரால் பெரும் இழப்பைத்தான் சந்தித்திருக்கின்றனர்.

டோன்பாஸ் பிராந்தியத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய மொழி பேசும் மக்கள்தான். எனவே, அங்குள்ள பல அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் ரஷ்ய ஆதரவு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். எனினும், பொதுமக்களிடையே ரஷ்யாவுக்கு அதிக ஆதரவு இல்லை என்று அங்கு நடத்தப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்புகள் சொல்கின்றன.

இந்நிலையில், நாட்டு மக்களிடம் நேற்று இரவு உரையாற்றிய ஸெலன்ஸ்கி, டோன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து வேதனையுடன் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இந்தப் போரில் ஏற்பட்டிருக்கும் மனித சேதம் மிக அதிகம். அச்சுறுத்தும் வகையிலான யுத்தம் இது. டோன்பாஸில் நடந்துவரும் இந்த யுத்தம், ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான யுத்தங்களில் ஒன்றாக ராணுவ வரலாற்றில் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்த ஸெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்காதோ எனும் அச்சம் எழுந்திருப்பதாகவும் கூறினார்.

“நாங்கள் ஒரு கொடும் தீய சக்தியை எதிர்கொண்டிருக்கிறோம். இதில் முன்னேறிச் சென்று எங்கள் பிராந்தியத்தை விடுவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. போதுமான எண்ணிக்கையில் நவீன பீரங்கிகள் வழங்கப்பட்டால்தான், டோன்பாஸ் பகுதியில் ரஷ்யா நிகழ்த்திவரும் சித்ரவதையை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இதுதொடர்பாக எங்கள் நட்பு நாடுகளின் கவனத்தை ஈர்க்க தினமும் முயற்சி செய்துவருகிறோம்” என்று தனது உரையில் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார். சியாவெராடோனெட்ஸ்க்கில் ஏராளமானோர் சிக்கித் தவிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

ரஷ்ய பீரங்கிகளைத் தகர்க்க நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகள் தேவை என உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. தங்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள் மற்றும் தற்காப்புத் தளவாடங்களின் பட்டியலை, நாளை (ஜூன் 15) பிரஸ்ஸல்ஸில் நடக்கவிருக்கும் நேட்டோ தொடர்புக் குழுக் கூட்டத்தில் உக்ரைன் அளிக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின், பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in