அண்ணன் மகள் மீதே மோசடி வழக்கு : டொனால்ட் டிரம்ப்

அண்ணன் மகள் மீதே மோசடி வழக்கு : டொனால்ட் டிரம்ப்
'தி இந்து' கோப்புப் படம்

வருமான வரி மோசடி செய்ததாக தன் மீது குற்றம் சுமத்திய அண்ணன் மகள் மீதும், அதைப் பத்திரிகைகளில் சிறப்புச் செய்தியாக வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீதும் வழக்குத் தொடுத்திருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

டொனால்ட் ட்ரம்ப் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவந்தார். அப்போது உண்மையான வருவாயை மறைத்து கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தார் என்று அவருடைய அண்ணன் மகள் மேரி ட்ரம்ப் (56) குற்றஞ்சாட்டினார்; அதுமட்டுமல்லாமல் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் என்று கூறி, குடும்பத்தார் வீட்டில் சேகரித்து வைத்திருந்த கணக்குப் பதிவேடுகளிலிருந்து சிலவற்றை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சூசன் கிரெய்க், டேவிட் பார்ஸ்டோ, ரஸ்ஸல் பியூட்டனர் ஆகியோருக்குக் கொடுத்தார் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார் என்றும் சாட்டியுள்ளார்.

“பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவரின் கடந்த கால வாழ்க்கை எப்படிப்பட்டது, தொழிலதிபராக இருந்தபோது அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை விசாரித்துத் தெரிவிக்க வேண்டியது பத்திரிகையாளர்களின் கடமை. அதைத்தான் செய்தோம், மற்றபடி அவரது அரசியல் செல்வாக்கைக் குறைக்க சதி செய்யவோ, அவர் மீது அவதூறு கற்பிக்கவோ முயலவில்லை” என்று கூறும் நியூயார்க் டைம்ஸ், வழக்கைச் சந்திக்கத் தயார் என்று அறிவித்துள்ளது.

14,000 வார்த்தைகளில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட சிறப்புக் கட்டுரைகளால் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்றும் குறைந்தபட்சம் ஆயிரம் லட்சம் டாலர்களாவது இழப்பீடு வாங்காமல் ஓயமாட்டேன் என்றும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். 1990-களில் மனை வணிகம், அடுக்ககம் விற்பனைத் தொழிலதிபராக இருந்த ட்ரம்ப் எந்த வகைகளில் எல்லாம் வருமானத்தைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்தார் என்று அந்தக் கட்டுரை விவரிக்கிறது.

”குடும்பச் சொத்திலிருந்து தன் பங்குக்குக் கிடைக்க வேண்டிய தொகையைத் தராமல் ஏமாற்றிவிட்டார்கள்” என்று டொனால்ட் ட்ரம்ப் மீதும் அவருடைய சகோதரி மரியான் ட்ரம்ப், சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் ஆகியோர் மீதும் கடந்த ஆண்டு வழக்கு தொடுத்தார் மேரி ட்ரம்ப். மேரி ட்ரம்பின் தந்தை பிரெட் ட்ரம்ப் ஜூனியர், டொனால்ட் ட்ரம்பின் அண்ணன். அவர் தனது 42-வது வயதிலேயே இறந்துவிட்டார். குடும்ப வணிகத்தை டொனால்ட்தான் அதற்குப் பிறகு மேற்கொண்டார். அதிபர் பதவிக்கான தேர்தலில் ட்ரம்ப் 2-வது முறை போட்டியிடும் சமயத்தில் வெளியான இந்தப் புகாரும் புத்தகமும் ட்ரம்பின் அரசியல் செல்வாக்கைக் குறைத்திருக்கும் என்பதும் உண்மைதான்.

Related Stories

No stories found.