பாகிஸ்தானைக் கண்டிக்க அருகதை இருக்கிறதா இலங்கைக்கு?

பாகிஸ்தானைக் கண்டிக்க 
அருகதை இருக்கிறதா இலங்கைக்கு?

பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிகழ்வு, இலங்கையில் சிங்களவர்களுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘மத அடிப்படைவாதம் மனித உரிமைகளை ஒருபோதும் மதிக்காது’ என்ற கொடுமைக்கு இந்நிகழ்வும் ஒரு சாட்சியாகும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு இதுபோன்ற அநீதிகள் நிகழ்த்தப்பட்டுவந்த நிலையில், இன மேலாதிக்க வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இனம் என்ற வகையில், ஈழத் தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்வு பெருத்த வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட் நகரில், தொழிற்சாலை ஒன்றில் மேலாளராகக் கடமையாற்றி வந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சகோதர இனத்தவரான 40 வயதான பிரியந்த குமார தியவடன, வன்முறைக் கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். தமது சமயத்தை நிந்தனை செய்ததாகக் கூறப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அவரைப் படுகொலை செய்திருக்கிறார்கள். அவர் கொலை செய்யப்படுகின்ற காட்சி, பார்க்கும் மனித உள்ளங்களைப் பதைபதைக்க வைக்கிறது

வன்முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுகின்றனர். அடிப்படைவாதத்தின் கோரமுகமாக நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன், இதைச் செய்த வன்முறைக் கும்பல் தண்டிக்கப்படவும் வேண்டியவர்கள். ஆனால், இந்தப் படுகொலைக்கு இலங்கை அரசு வெளிப்படையாகக் கண்டிக்க பின்னடிப்பதன் அரசியலையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிரியந்த குமார தியவடன, கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரி. 2010-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள்ள தொழிற்சாலையில் இவர் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவரைப் பறிகொடுத்த நிலையில் மனைவி குழந்தைகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இத்தகைய படுகொலையை நிகழ்த்துகிறது. அதேவேளை இலங்கையில் இதைவிடவும் கொடுமையான பவுத்த சிங்களப் பேரினவாத அடிப்படைவாதம் நிலவிவருகிறது. அதன் தலைமை நிறுவனமாக இலங்கை அரசே செயற்படுகிறது. தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகப் பெரும் வன்முறைகளும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக 70 வருடங்களாகத் தொடர்கின்ற அடக்குமுறை இதன் உச்ச வடிவமாகும்.

இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, தமிழ் மக்களுக்கு எதிராக இப்படிப் பல வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 1958 இனப்படுகொலை, 1983 இனப்படுகொலை அதற்குப் பிறகு எத்தனையோ கிராமங்களில் நடந்த எண்ணற்ற படுகொலைகள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று இலங்கையில் தமிழர்களின் உயிர்கள் மனித குலத்துக்கு எதிரான கோரச் செயல்களால் பலியெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் பலவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்த மத அடிப்படைவாதக் கொலையை கண்டிக்கும் அருகதையை இலங்கை இழந்துவிட்டதால்தான், வெளிப்படையாக – அதிகாரபூர்வமாக இலங்கை பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை என்பதே உண்மையாகும். அத்துடன் இலங்கையில் இஸ்லாமியர்கள் உள்ளடங்கலாக சிறுபான்மை இன மக்கள் அடக்கி ஒடுக்கி அழிக்கப்படுகின்றபோது அதற்கு ஆதரவு வழங்கியதன் வாயிலாக, பாகிஸ்தானும் இலங்கைக்கு விளக்கம் அளிக்கும் அருகதையை இழந்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அத்துடன் இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்குப் பாகிஸ்தான் பல உதவிகளை செய்திருக்கிறது. “பாகிஸ்தான் வழங்கிய பல்குழல் பீரங்கிகள் இல்லாவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைப் பிடித்திருப்பார்கள், பல்குழல் பீரங்கிகளினாலேயே நாம் அதனை தடுத்து நிறுத்தினோம்…” என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே கடந்த ஆண்டில் கூறியிருந்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அதை ஐநா பேசத் தவறிவிட்டதாகவும் ஐநா சபையில் பாகிஸ்தான் கூறி, ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு அளித்திருந்தது.

2021 பிப்ரவரி 23-ல் இலங்கை சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வரவேற்கும் நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச
2021 பிப்ரவரி 23-ல் இலங்கை சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வரவேற்கும் நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போரில் பாகிஸ்தான் பெரும் பங்காற்றியதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்து உரையாற்றியிருந்தார். இப்போது இந்தப் படுகொலை நடந்த பிறகு, விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் இது பாகிஸ்தானுக்கு நிகழ்ந்த அவமானம் என்றும் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியிருக்கிறார். அத்துடன் இலங்கை அரசு பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் இந்தப் பேச்சைப் பாராட்டியுள்ளது. இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகனும் அமைச்சருமான நாமல் ராஜபக்ச, இம்ரான் கானைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் இப்படுகொலை குறித்து ஸ்ரீலங்கா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனாலும் இப்படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக, ஸ்ரீலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்ததன இலங்கைப் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை வைத்து இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களை மிரட்டும் தொனியில் சில அரசியல்வாதிகளும் பவுத்த பேரினவாத அடிப்படைவாதிகளும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். பாகிஸ்தானில் வன்முறையைச் செய்தவர்களுக்கும் இப்படிப் பேசுபவர்களுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். குறிப்பாக சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

இதற்கு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட ஈழ மக்களின் நிலைப்பாடு. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை மற்றும் அது சார்ந்த மீறல்கள் போல, உலகின் எந்தப் பாகத்திலும் நடக்கக்கூடாது என்பதற்காகவுமே ஈழத்தில் இனப்படுகொலைக்கான நீதி கோரிய போராட்டம் நடக்கிறது. ஈழ இனப்படுகொலைக்கான நீதி என்பது உலகின் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்குமான நீதியே ஆகும்.

தீபச்செல்வன், ஈழக் கவிஞர், எழுத்தாளர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in