அதானிக்கு மின் திட்டத்தை வழங்க அழுத்தம் கொடுத்தாரா மோடி? - இலங்கையில் வெடித்த சர்ச்சையின் பின்னணி

அதானிக்கு மின் திட்டத்தை வழங்க அழுத்தம் கொடுத்தாரா மோடி? - இலங்கையில் வெடித்த சர்ச்சையின் பின்னணி

இலங்கையின் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானிக்கு வழங்க பிரதமர் மோடி வலியுறுத்தினார் என கோத்தபய ராஜபக்ச தன்னிடம் கூறியதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது, தற்போது அவர் தனது கருத்தைத் திரும்பப்பெற்றுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு விசாரணையின் போது பதிலளித்த இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ, ​​“2021-ம் ஆண்டு நவம்பர் 24 அன்று, ஒரு கூட்டத்திற்குப் பிறகு அதிபர் கோத்தபய ராஜபக்ச என்னை வரவழைத்து, இந்த மின் திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியாவின் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார் என்றார். இந்த விஷயம் எனக்கோ அல்லது இலங்கை மின்சார சபைக்கோ சம்பந்தமில்லை என்றும், இது முதலீட்டுச் சபை தொடர்புடையது என்று நான் கூறினேன். இது இரு அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தம், ஆனால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த விலைக் கொள்கையின்படி பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தேன் ” என்று கூறினார், இவரின் இந்த அறிக்கை இலங்கையில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

ஆனால் இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் கோத்தபய ராஜபக்ச, ‘மன்னாரில் காற்றாலை மின் திட்டம் வழங்குவது தொடர்பான குழு விசாரணையில் இலங்கை மின் சபை தலைவர் தெரிவித்தபடி இந்தத் திட்டத்தை எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவது குறித்த குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த விஷயத்தில் பொறுப்பான தகவல் தொடர்பு தொடரும் என நம்புகிறேன்’ என்று அதில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபை தலைவர் தனது முந்தைய அறிக்கையைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார். உணர்ச்சிவசப்பட்டு, அழுத்தத்தின் கீழ் இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் வெடித்தது இந்த அதானி சர்ச்சை?

இலங்கையில் 1989-ம் ஆண்டின் மின்சார சட்டத்தின்படி 10 மெகாவாட்ஸ்க்கு அதிகமான திட்டங்கள் போட்டி ஏல செயல்முறை மூலமாகவே நடைமுறைக்கு வரும். ஆனால் மன்னாரில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை இந்த விதிமுறைகளை மீறி அதானிக்கு வழங்க ஆளும்கட்சி முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகளும், இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களும் குற்றம்சாட்டி போராடி வருகின்றன.

இந்த நிலையில் 1989 சட்டத்தின் மீதான திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு நிறைவேறியது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் பதிவானது. இந்தச் சூழலில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்கவே அரசாங்கம் அவசரமாக திருத்தங்களைச் செய்து வருவதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியது.

“அதானி குழுமம் இலங்கைக்குள் நுழைவதற்குப் பின்கதவைத் தேர்ந்தெடுத்துள்ளதை ஆழ்ந்த வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். போட்டியைத் தவிர்ப்பதை நாம் தயவாக எடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. இது நமது சீர்குலைந்த பொருளாதாரத்தை மேலும் கடுமையாக பாதிக்கும்" என எதிர்க்கட்சியான எஸ்ஜேபியின் தலைவரும், முன்னாள் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சருமான அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்

இந்தியாவில் அதானியின் வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், தற்போது இலங்கையிலும் அதானியின் பெயர் சர்ச்சைகளில் அடிபடத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in