அணை கட்ட திரட்டிய நிதி 40 மில்லியன் டாலர்; விளம்பரச் செலவோ 63 மில்லியன் டாலர்!

பாகிஸ்தான் அரசு மீது பரபரப்புக் குற்றச்சாட்டு
அணை கட்ட திரட்டிய நிதி 40 மில்லியன் டாலர்; விளம்பரச் செலவோ 63 மில்லியன் டாலர்!

பாகிஸ்தானில் சமீபத்தில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. பாகிஸ்தான் வரலாற்றில் மிக மிக மோசமான வெள்ளமாகக் கருதப்படும் இந்தப் பேரழிவுக்குப் பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் பிரதானமாகச் சொல்லப்படுவது, பல தசாப்தங்களாகத் தொடரும் தியாமிர் - பாஷா அணை கட்டுமானப் பணி. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பாகிஸ்தானியர்களைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹிஸ்தான் மாவட்டத்துக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கித் பல்திஸ்தான் பகுதியின் தியாமிர் பகுதிக்கும் இடையே, சிந்து நதியின் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும் என 1980-லேயே பரிசீலிக்கப்பட்டது. 1998-ல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அணை கட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த அணை முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை.

இத்தனைக்கும் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அந்த அணை ஒரு தீர்வாக இருக்கும் எனும் நம்பிக்கையில் அதற்கான பணி தொடங்கப்பட்டது. அணை கட்டி முடிக்கப்படும்போது, அதன் மொத்த உயரம் 272 மீட்டராக இருக்கும் என்றும், 4,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான விவாதங்கள், அதிகரித்துவந்த கட்டுமானச் செலவுகள் போன்ற காரணிகளால் தாமதம் ஏற்பட்டது.

அணை கட்டுமானத்துக்காகப் பொதுமக்களிடமிருந்து நிதியும் திரட்டப்பட்டது. 2018-ல் முன்னாள் தலைமை நீதிபதி சாகிப் நிஸார், அணை கட்டுமானப் பணிக்கான நிதி திரட்டும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானின் மிகப் பெரிய அணையாக உருவாகும் தியாமிர் - பாஷா அணைக்காக மக்கள் தாராளமாக நன்கொடை வழங்கினார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், முன்னணி இசைக் கலைஞர்கள் எனப் பலரும் பணத்தை வாரி அளித்தனர். ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்ட வேண்டும் என்பதற்காக, அரசு ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள் போன்றோர் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கினர்.

இதற்கிடையே, தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சாகிப் நிஸார், இதுவரை திரட்டப்பட்ட நிதி அணை கட்டுமானத்துக்கானது அல்ல; அணை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கானது என்று கூறியது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தச் சூழலில்தான், இந்த அணை கட்டுமானத்துக்காகத் திரட்டப்பட்ட நிதி, 40 மில்லியன் டாலர் என்றும், அது குறித்த விளம்பரத்துக்காகச் செலவிடப்பட்ட தொகை 63 மில்லியன் டாலர் என்றும் பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் அறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது. 63 மில்லியன் டாலரின் இந்திய மதிப்பு ஏறத்தாழ 502 கோடி ரூபாய்!

இதுகுறித்து கடந்த மாதம், சாகிப் நிஸாரை அழைத்து அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறது நாடாளுமன்ற விவகாரக் குழு.

இந்தச் சூழலில், இந்த அணை கட்டுமானத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக வைஸ் நியூஸ் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது பாகிஸ்தான் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in