புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்குக்கு இரண்டாவது புலிட்சர் விருது!

புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்குக்கு இரண்டாவது புலிட்சர் விருது!

2022-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதழியல், எழுத்து, நாடகம், இசை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இந்த உயரிய விருது, தாலிபான்களால் கொல்லப்பட்ட புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர்கள்

இதழியல் பிரிவில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்கும், புகைப்படப் பத்திரிகையாளர்கள் அத்னான் அபிதி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் தாவே ஆகியோரும் இந்த விருதுக்காகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பெருந்தொற்று மரணங்கள், மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைப் பதிவுசெய்தமைக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

குறிப்பாக, கரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படும் காட்சியைப் புகைப்படங்களாகப் பதிவுசெய்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்குக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய காலட்டத்தில் அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டிருந்த புகைப்படப் பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், தாலிபான்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்படுகிறது. இது அவருக்கு வழங்கப்படும் இரண்டாவது புலிட்சர் விருது ஆகும்.

புலிட்சர் விருதுகள் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன. இதழியல் துறையில் பிரேக்கிங் நியூஸ் செய்திகள், புலனாய்வுச் செய்திகள், உள்ளூர் செய்திகள், தேசியச் செய்திகள், சர்வதேசச் செய்திகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

2021 ஜனவரி 6-ல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கலவரம் செய்தது குறித்த செய்திகளை வெளியிட்டமைக்காக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்கு சிறந்த இதழியல் சேவைக்கான விருது வழங்கப்படுகிறது.

உக்ரைன் போர்க்களக் காட்சிகளைப் படம் பிடித்து உலகுக்குக் காட்டிய உக்ரைன் பத்திரிகையாளர்கள் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in