‘மூன்றாம் உலகப் போர் அபாயம் நிதர்சனமானது’ - ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ்
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ்

ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் உக்ரைனுக்குக் கனரக ஆயுதங்களை அனுப்புவது தொடர்பாக விவாதிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஜெர்மனியில் இன்று முக்கியக் கூட்டம் நடத்துகின்றன. இந்தச் சூழலில், மூன்றாம் உலகப் போர் அபாயம் நிதர்சனமானது என ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தப் போரில் பல்வேறு நாடுகளிடமிருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு தங்களை நாட்டைத் தற்காத்துக்கொள்ள உக்ரைனியர்கள் தீரத்துடன் போரிட்டுவருகிறார்கள். அதேவேளையில், ரஷ்யாவுக்குக் கடுமையான பதிலடி கொடுக்க தங்களுக்குப் போர் விமானங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களையும் தளவாடங்களையும் நேட்டோ நாடுகள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்திவந்தது. இவ்விஷயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ ஆரம்பத்தில் சற்றே தயக்கம் காட்டின. தற்போது, ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைனுக்கு அவற்றை வழங்க முடிவெடுத்திருக்கின்றன.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

இதற்கிடையே, உக்ரைன் சென்று அதிபர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்திருக்கும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் உக்ரைனுக்குக் கூடுதலாக 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்திருக்கின்றனர்.

அமெரிக்கா விடுத்த அழைப்பின்பேரில் ஜெர்மனியில் நடக்கும் பாதுகாப்பு மாநாட்டில் ஐரோப்பிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பில் சேர முன்வந்திருக்கும் ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் கேட்கும் கனரக ஆயுதங்களை வழங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர உக்ரைன் விண்ணப்பித்தது அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. பொதுவாகவே போர்களில் நடுநிலை வகிக்கும் ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேர முன்வந்தது முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல், அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர், சீனாவுக்கும் உத்வேகம் அளிக்கும் சூழல் உருவானால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனும் எண்ணத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்நிலையில், மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் குறித்து எச்சரித்திருக்கிறார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ். இந்த எச்சரிக்கை நிஜமானது என்றும், அதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in