உக்ரைனின் தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் போர்க் கப்பல் மூழ்கிவிட்டதா?

உக்ரைனின் தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் போர்க் கப்பல் மூழ்கிவிட்டதா?

கருங்கடல் பகுதியில் உக்ரைன் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த ‘மோஸ்க்வா’ எனும் ரஷ்யப் போர்க் கப்பல், கடலில் மூழ்கிவிட்டதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

க்ரைமியாவில் உள்ள செவஸ்டோபோல் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தக் கப்பல் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், தெற்கு உக்ரைன் பகுதியில் கருங்கடல் பகுதியில் அந்தக் கப்பல் மூழ்கிவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.

சோவியத் ஒன்றிய யுகத்தில், உக்ரைனின் மிகோலிவ் நகரில் உருவாக்கப்பட்ட கப்பல் அது.1980-கள் முதல் இக்கப்பல் ரஷ்யக் கடற்படையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தக் கப்பலில் சேதம் ஏற்பட்ட தகவல் வெளியானதும், “கருங்கடலில் ‘நெப்டியூன்’ ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலைக் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கின்றன. உக்ரைனின் மகிமைக்கு இது சான்று” என்று ஒடெஸ்ஸா நகர ஆளுநர் மாக்ஸிம் மார்சென்கோ கூறியிருந்தார். அந்தக் கப்பலில் ரஷ்யக் கடற்படையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். “அந்தக் கப்பல் எரிந்துகொண்டிருக்கிறது. கூடவே கடலில் கடும் காற்று வீசிவருகிறது. இதனால் அவர்களுக்கு (ரஷ்ய வீரர்கள்) உதவி கிடைக்குமா எனத் தெரியவில்லை” என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் அலெக்ஸீய் ஆரெஸ்டோவிச் கூறியிருந்தார்.

முரணான தகவல்கள்

இந்த விவகாரத்தில், ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா தெரிவித்துவரும் தகவல்களில் பல்வேறு முரண்கள் இருக்கின்றன. உக்ரைன் தாக்குதலில் தங்கள் கப்பல் சேதமடைந்துவிட்டதாகவும் கப்பலில் இருந்த 500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ஆரம்பத்தில் ரஷ்யா கூறியிருந்தது. எனினும், அந்தக் கப்பல் மூழ்கிவிட்டதாக உக்ரைன் கூறியதை ரஷ்யா ஏற்கவில்லை.

தங்கள் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தால் ஏற்பட்ட தீவிபத்து கப்பல் சேதமடைய காரணம் எனும் வாதத்தையும் ரஷ்யா முன்வைக்கிறது. அந்தக் கப்பலைக் கட்டி இழுத்து துறைமுகத்துக்குக் கொண்டுவந்ததாகவும், கடல் கொந்தளிப்புடன் இருந்ததால் அக்கப்பல் மூழ்கிவிட்டதாகவும் ரஷ்யப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனோ, அந்தக் கப்பல் சேதமடைந்திருந்தாலும் இன்னமும் கடலில் மிதந்துகொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. கூடவே, அந்தக் கப்பலில் ஏற்பட்ட சேதத்துக்குக் காரணம் என்ன என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, உக்ரைனின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தங்கள் கப்பல்களைப் பாதுகாக்க கருங்கடல் பகுதியிலிருந்து அவற்றை வெகுதூரம் கொண்டுசெல்லும் வேலையில் ரஷ்யக் கடற்படை இறங்கியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.