மகள் பெயரை முதுகில் டாட்டூவாக தரித்த இவான்ஸ்
மகள் பெயரை முதுகில் டாட்டூவாக தரித்த இவான்ஸ்

அப்பப்பா... அப்பா! மகள் பெயரை உடலில் டாட்டூ குத்தியதில் கின்னஸ் சாதனை!

தனது மகளின் பெயரை உடலில் அதிக எண்ணிக்கையில் டாட்டூவாக அலங்கரித்த வகையில் அப்பா ஒருவர் கின்னஸ் உலக சாதனைக்கு தகுதியாகி இருக்கிறார்.

சுய மோகமும், தானாக பிரபல்யம் பாராட்டிக் கொள்வதும் சேர்ந்த நவநாகரிக மோகங்களில் ஒன்று டாட்டூ! நம்மூர் பச்சை குத்துவதன் நீட்சியே டாட்டூ என்ற போதும், காதல், பாசம், விருப்பம், ரசனை என சகலத்தை முன்னிட்டும் உடலில் டாட்டூவாக அலங்கரித்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. அவற்றில் அதிக எண்ணிக்கை, அதிக பரப்பு, அதிக நுட்பம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பலர் உலக சாதனையும் படைத்திருக்கிறார்கள்.

பிரிட்டனை சேர்ந்த ஒரு அப்பா, தனது மகள் மீதான மிகையான பிரியத்தில் மகள் பெயரை அதிக எண்ணிக்கையில் உடலில் டாட்டூவாக குத்தியதில் உலக சாதனை படைத்திருக்கிறார். அவர் பெயர் மார்க் ஓவன் இவான்ஸ். மகள் பெயர் லூஸி. தனது செல்ல தேவதையான லூஸியின் பெயரில் பித்தான தகப்பன், 2017ல் உடலில் 267 முறை மகள் பெயரை டாட்டூ குத்திக்கொண்டார்.

முதுகில் மகள் பெயரில் டாட்டூ
முதுகில் மகள் பெயரில் டாட்டூ

2020ல் டியட்ரா விஜில் என்ற அமெரிக்கப் பெண் ஒருவர், இவான்ஸ் சாதனையை முறியடிக்கும் வகையில் தனது பெயரை 300 முறை டாட்டூவாக தரித்துக்கொண்டார். இவான்ஸ் பொங்கி எழுந்தார். டாட்டூ சாதனைக்கு அப்பால், மகளின் பெயரிலான சாதனையை இன்னொருவர் சாய்ப்பதா என்று வீறுகொண்டார்.

தொடைகள் உட்பட உடலின் பல்வேறு இடங்களில் மகள் லூஸியின் பெயரை 400 எண்ணிக்கையில் டாட்டூ குத்த ஆரம்பித்தார். ஒட்டுமொத்தமாக 667 என்ற எண்ணிக்கையில் சேர்ந்த பிறகே, டாட்டூ குத்தும் கலைஞர்கள் இருவரையும் விடுவித்தார். அமெரிக்கப் பெண்ணின் சாதனையை சாய்த்ததோடு, அடுத்து வரும் காலத்தில் சுலபத்தில் கடக்க முடியாதபடி டாட்டூ எண்ணிக்கையில் உச்சத்துக்கு எகிறிக் குதித்திருக்கிறார் இவான்ஸ்.

ஒரே பெயரை அதிக எண்ணிக்கையில் ஒருவரின் உடலில் இடம்பெற்ற வகையில், இவான்ஸ் பெயர் தற்போது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றிருக்கிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in