‘300 பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ - அந்நியச் செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க இலங்கை உத்தரவு!

‘300 பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ - அந்நியச் செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க இலங்கை உத்தரவு!

கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கம், சாக்லேட், வாசனை திரவியங்கள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச கடந்த மாதம் வெளிநாட்டிற்கு தப்பியோடி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் தற்போது ராஜபக்சவின் கட்சியின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபராக உள்ளார்.

இந்த நிலையில் பொருளாதாரத்தை வலுப்படுத்த இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்நாட்டின் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில், சாக்லேட்டுகள், வாசனை திரவியங்கள், கைக்கடிகாரங்கள், தொலைபேசிகள், பிரஷர் குக்கர், ஏசி, இசைக்கருவிகள், மது மற்றும் மது அல்லாத பானங்கள் உட்பட மொத்தம் 300 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. .

நாட்டின் நிதிப் பொறுப்பை கவனிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். ஆனாலும், இத்தகைய பொருட்கள் ஆகஸ்ட் 23 ம் தேதிக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டு செப்டம்பர் 14 ம் தேதிக்கு முன்னர் நாட்டிற்கு வந்தால் அவை அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்தது. இதனால் உணவு, மருந்து, விவசாய இடுபொருட்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தனது சர்வதேச கடனைத் திருப்பி செலுத்த இயலாது என்று ஏப்ரல் மாதம் இலங்கை அறிவித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in