போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணை: உக்ரைன் போர் திசைமாறுகிறதா?

ஏவியது ரஷ்யாவாக இருக்க வாய்ப்பில்லை என ஜோ பைடன் கருத்து
போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணை: உக்ரைன் போர் திசைமாறுகிறதா?

இந்தோனேசியாவில் நடந்துவரும் ஜி20 மாநாட்டில், உக்ரைன் போர் விவகாரம் முக்கிய விவாதமாக இடம்பெற்றிருக்கும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணை பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.

போலந்தின் பிரஸேவோடவ் கிராமத்தில் நேற்று ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்ததில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரு டிராக்டர் உருக்குலைந்தது.

போலந்து நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடு என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் விசாரணை தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே, இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தில் ஜி20 மாநாடு நடந்துவருகிறது. அதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். ரஷ்ய அதிபர் புதின் இதில் பங்கேற்கவில்லை. அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் மட்டும்தான் கலந்துகொண்டிருக்கிறார். நேற்று காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உரையாற்றினார்.

உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கும் நேரடிப் பாதிப்புகள், ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்திருப்பது போன்றவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்துக்கு பின்னரும் ரஷ்யாவுடனான உறவைத் தொடரும் இந்தியாவும் சீனாவும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தின. இது ரஷ்யாவுக்குச் சற்று அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படியான சூழலில்தான், போலந்தில் ஏவுகணை விழுந்து வெடித்திருக்கிறது. இதனால் போர் திசைமாறுகிறதா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இந்த ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் எனப் பேச்சுக்கள் எழுந்த நிலையில், ரஷ்யா அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலந்து ஊடகங்களில் வெளியான புகைப்படங்களைப் பார்த்ததாகவும், அதில் இருக்கும் ஏவுகணை பாகங்கல் தங்கள் நாட்டின் தயாரிப்பு அல்ல என்றும் ரஷ்யப் பாதுகாப்புத் துறை விளக்கமளித்திருந்தது.

இவ்விஷயத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கும் கருத்து மிகுந்த கவனம் பெறுகிறது.

இந்த ஏவுகணையை ரஷ்யா ஏவியிருக்குமா எனும் கேள்விக்குப் பதிலளித்திருக்கும் பைடன், “அப்படி நடந்திருக்காது என்றுதான் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையாக விசாரித்து அறியும் வரை அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. எனினும், ஏவுகணை ஏவப்பட்ட பாதையை வைத்துப் பார்க்கும்போது அது ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டதாகத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

எனினும், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பகைமை அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததைக் காரணம் காட்டித்தான் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. நேட்டோவில் சேருவதன் மூலம் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. ஜி20 மாநாட்டுக்கு நடுவில் நேற்று உக்ரைனின் மின்னுற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in