வடகொரியாவின் கரோனா பாதிப்பு நிலைமை மோசமாகி வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

வடகொரியாவின் கரோனா பாதிப்பு நிலைமை மோசமாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் கடந்த மே 12-ம் தேதி முதன்முதலாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது என அந்த நாட்டு அரசு தெரிவித்தது. அதன்பின்னர் படிப்படியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமானது. இந்தச் சூழலில் கடந்த வாரம் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாகப் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை இயக்குநர் மைக்கேல் ரியான், “வடகொரியாவில் கரோனா நிலைமை மோசமாகி வருகிறது என்று நாங்கள் கருதுகிறோம். பாதிப்புகள் குறித்த மிகக் குறைந்த தகவலை மட்டுமே அந்நாட்டு அரசு வழங்குகிறது. எனவே இப்போது நாங்கள் அந்த நாட்டில் உள்ள நிலைமையைப் பற்றிய போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்ளும் நிலையில் இல்லை. நம்மால் தேவையான தரவுகளைப் பெற முடியாததால் உலகுக்குச் சரியான பகுப்பாய்வை வழங்குவது மிகவும் கடினமாக உள்ளது" என்று கூறினார்.

வடகொரியாவில் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமான கோவிட் 19 தொடர்பான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் அந்த நாட்டின் அதிகாரபூர்வ தகவல்களின்படி இந்த பாதிப்புகள் அனைத்தும் ‘காய்ச்சல்’ என்று மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.

வட கொரிய அரசின் மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 96,600 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. புதிதாக இறப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வார இறுதியில் 69 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மே மாதத்தின் மத்தியில் வடகொரியாவில் கரோனா பாதிப்பு மிக வேகமாக உயர்ந்து தினசரி தொற்று எண்ணிக்கை 3,90,000 என இருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக ஒரு லட்சத்துக்கும் குறைவாக தினசரி கரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது.

இந்தச் சூழலில், உலக சுகாதார நிறுவனம் வழங்கிய கரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 2.5 கோடி மக்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் ரியான், “ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள வடகொரியாவின் சுகாதார அமைப்பில், அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ள மக்களிடம் இந்த நோய் தீவிரமாக பரவுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை. இது வடகொரிய மக்களுக்கும் நல்லதல்ல, அந்தப் பிராந்தியத்திற்கும் நல்லதல்ல. உலகுக்கும் நல்லதல்ல. நாங்கள் பல சந்தர்ப்பங்களில் வடகொரியாவுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். இனியும் தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கத் தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in