
சீனாவில் கரோனா தொற்றால் தினசரி 9 ஆயிரம் பேர் இறந்து வரும் நிலையில், ஜனவரி மாதம் தினசரி 25 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் கடந்த 2019 டிசம்பர் 8-ம் தேதி கரோனா தொற்று முதன்முதலில் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மெல்ல, மெல்ல உலகமெங்கும் பரவத் தொடங்கியது.
கடந்த 2020 மார்ச் மூன்றாவது வாரத்தில் இந்தியாவில் பரவத்தொடங்கியதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. இதைதொடர்ந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதனால், தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டதால், பொதுமக்களிடம் அச்சம் விலகத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தேசிய ஊரடங்கு அமல் படிப்படியாக தளர்த்தப்பட்டன. மூன்று மாதம் முடங்கிய பொது போக்குவரத்து, மூடிக்கிடந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் துவங்கின. ஆனால் இதே கால கட்டத்தில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறையவில்லை. இந்நிலையில் கொஞ்சம் விட்டுப் பிடித்த தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.
கடந்த 2021 ஏப்ரல், மே மாதங்களில் வேகமெடுத்த தொற்று பரவலுக்கு இந்தியாவில் உயிரிழப்பு அதிகரித்தது. இரண்டாம் கட்டத் தொற்று பரவல் உயிரிழப்புகளால் மக்களிடம் ஏற்பட்ட அச்சம் போக்க மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொண்டு கரோனா தொற்று அபாயத்தில் இருந்து விலகி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
கரோனா அச்சம் முற்றிலும் நீங்கிய நிலையில், சீனாவில் தற்போது கரோனா மீண்டும் அதிவேகமாக பரவத்தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் 24.80 கோடி பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினசரி பாதிப்பு சராசரியாக ஒரு கோடி எனலாம். இதன் காரணமாக இறப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் இறப்பதாகவும், ஜனவரியில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக உயரும் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். சீனாவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், கரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீனாவின் கரோனா தொற்று ஜனவரி 13-ம் தேதி முதல் உச்சத்தை எட்டும் என்று சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது, அப்போது தினசரி இறப்பு எண்ணிக்கை சுமார் 25 ஆயிரமாக உயரும் என்று கணித்துள்ளது.