கறுப்பினச் சிறுவனைக் கைதுசெய்த அமெரிக்க போலீஸ்: காரணம் என்ன தெரியுமா?

கறுப்பினச் சிறுவனைக் கைதுசெய்த அமெரிக்க போலீஸ்: காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் வெளியான காணொலி ஒன்று அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அந்தச் சிறுவன் அழுதுகொண்டே செல்வதும், போலீஸார் அவனை வாகனத்தில் அமரவைப்பதும் அந்தக் காணொலியில் பதிவாகியிருக்கிறது.

இந்தக் காட்சியைப் பதிவுசெய்யும் நபர், “நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று போலீஸாரிடம் கேட்கிறார். ஒரு காவலர், “நான் என்ன செய்கிறேன் என ஊகித்துப் பாருங்கள்” என்று சொல்கிறார். மற்றொரு காவலர், “சிப்ஸைத் திருடிவிட்டான்” என்று கூறுகிறார்.

இதையடுத்து, அந்தக் காணொலியைப் பதிவுசெய்யும் நபர், ஒரு கொடூரக் குற்றவாளியைப் போல அந்தச் சிறுவனை நடத்துவதாகக் கண்டித்ததுடன், சிப்ஸுக்குத் தானே பணம் கொடுப்பதாகவும் சொல்கிறார். அந்தக் காணொலி ட்விட்டரில் வெளியிடப்பட்டிருக்கிறது. 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அதைப் பார்த்திருக்கின்றனர்.

பின்னணி என்ன?

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள சிரக்யூஸ் நகரில் நடந்த சம்பவம் தொடர்பான காணொலி அது. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் போலீஸார், சிப்ஸ் பாக்கெட்டைத் திருடிவிட்டதாக ஒரு கறுப்பினச் சிறுவனை விசாரித்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். 8 வயதுள்ள அந்தச் சிறுவன் விடுவிக்கப்பட்டதாகவும் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்தச் சம்பவத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இது நிறவெறியின் வெளிப்பாடு எனப் பலர் விமர்சித்திருக்கின்றனர்.

அந்தக் காணொலி குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய நியூயார்க் ஆளுநர் கேதே ஹோச்சுல், “இதயத்தைப் பிளக்கும் சம்பவம் இது. நம்மில் பெரும்பாலானோர் பெற்றோர்கள். இப்படி ஒரு அனுபவத்தை அந்தக் குழந்தை எப்படி தாங்கிக்கொண்டான் எனக் கற்பனை செய்தால் கொடுமையாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.