
சூடானின் டார்ஃபூரில் 6 நாட்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 125 பேர் பலியாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு டார்ஃபூரின் தலைநகரான எல்.ஜெனினாவிலிருந்து வடக்கே சுமார் 160 கிமீ தொலைவில் உள்ள கோல்பஸ் பகுதியில் கிமிர் பழங்குடியினருக்கும், அரபு ரிசிகாட் பழங்குடியினருக்கும் 2003-ம் ஆண்டு முதல் மோதல் நடந்து வருகிறது. இதன் காரணமாக கிமிர் பழங்குடி மக்கள் தங்கள் வசித்த சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர்.
குறிப்பாக, டார்ஃபூர் மாகாணத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஆனால், தற்போது மோதல் சற்று குறைந்ததையடுத்து இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். ஆனால், ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை ரிசிகாட் பழங்குடியினர் கைப்பற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனால் நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும், நிலத்தை கைப்பற்றியவர்களுக்கும் தொடர்ந்து நடக்கும் மோதல் வன்முறையாக மாறி வருகிறது. கடந்த ஜூன் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்ற மோதலில் 125-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) இன்று தெரிவித்துள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டதுடன் வீடுகள் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 50 ஆயிரம் மக்கள் கொல்பஸ் அருகே உள்ள சிர்பா, ஜெபல் மூன் மற்றும் சர்ஃபா ஓம்ராவிற்கு தப்பி ஓடிவிட்டனர் என்று ஐநா கூறியுள்ளது. இந்த மோதலில் உயிரிழந்த 101 பேர் கிமிர் பழங்குடியினர் என்றும், 25 பேர் ரிசிகாட் பழங்குடியினரும் என்றும் ஐநா கூறியுள்ளது.