‘காண்டம்’ இலவசம்: நாட்டு மக்களுக்கு அதிபரின் புத்தாண்டு பரிசு

பாலியல் விழிப்புணர்வில் பிரான்ஸின் புதிய புரட்சி
‘காண்டம்’ இலவசம்: நாட்டு மக்களுக்கு அதிபரின் புத்தாண்டு பரிசு

25 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவசமாக ’காண்டம்’ வழங்கும் திட்டத்தை, பிரான்ஸ் மக்களுக்கான புத்தாண்டு பரிசாக அறிவித்திருக்கிறார் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். கருத்தடை மற்றும் பாலியல் கல்வியில் இது புதிய புரட்சி என்றும் அவர் வர்ணித்திருக்கிறார்.

2017-இல் பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றபோது அவருக்கு வயது 39. நாட்டின் மிகவும் இளம் அதிபராக பொறுப்பேற்ற அவர், இளைஞர்கள் நலன் நாடும் திட்டங்கள் பலவற்றையும் பொறுப்புடன் அறிவித்தார். அவற்றில் ஒன்றாக பாலியல் கல்வியையும் பாவித்தார். தியரி மட்டுமன்றி செயல்பாட்டிலும் அவர் சிந்தனை சென்றதில், இளம் வயதினர் மத்தியில் பரவும் பாலியல் நோய்கள் மற்றும் திட்டமிடப்படாத கருத்தரிப்பை தடுக்கும் நோக்கில் இலவச காண்டம் அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி, 18-25 வயதுக்குட்பட்ட பெண்கள் அங்கீகாரம் பெற்ற மற்றும் மருத்துவர்கள் அல்லது செவிலியர் பரிந்துரையுடன் சென்றால், தேவையான உறைகளை பார்மஸியில் பெற முடியும். பாலியல் உறவில் ஈடுபடும் இருபாலரில் அதன் ஏடாகூட விளைவை சுமப்பவர்களாக பெண்கள் மட்டுமே சிக்குவதை தவிர்க்கவும் இவை உதவின. இந்த சலுகையின் நீட்சியாக அதிபரின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி மருத்துவர் பரிந்துரை இன்றியும் 18-25 வயதுக்குட்பட்டோர் பார்மஸியில் கருத்தடை சாதனங்களை பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. கருத்தடைக்கான முன்னெடுப்பில் இது புதிய புரட்சி என வர்ணித்திருக்கிறார் அதிபர் மேக்ரான்.

தொடர்ந்து 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டது. இந்த வயதினர் மத்தியிலும் பாலியல் உறவுகள் அதிகரித்துள்ளதையும், அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறாவர்களாக இருப்பதையும் அதிபருக்கு சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

மேலும், நடப்பு பாலியல் கல்வி குறித்து தனது அதிருப்தியை பதிவு செய்த அதிபர் அவற்றை முறையாக இளம்வயதினருக்கு சென்று சேர்ப்பிக்கவும் புதிய திட்டங்கள் அமலாகும் என உறுதியளித்திருக்கிறார். பிரான்ஸ் தேசத்தில் இளம்வயதினர் மத்தியில் திட்டமிடப்படாத கருத்தரிப்பு என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இவற்றின் பக்கவிளைவுகளாக உடல், மனம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. கருக்கலைப்பு எளிதில் சாத்தியமாகும் தேசத்தில், அவற்றுக்கு அவசியமில்லாத தடுப்பு முறைகளை நோக்கி மக்களை வழி நடத்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி பூண்டிருக்கிறார்.

நாட்டின் தலைவர்களாக, வயதில் மூத்தவர்களைவிட இளைஞர்களை வரவேற்பதில், இளம் தலைமுறையினருக்கு இப்படியும் அனுகூலங்கள் அமையும்போல!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in