இஸ்ரேலை ஆதரிக்கும் கோகோ கோலா, நெஸ்லே நிறுவனங்களுக்குத் தடை - துருக்கி அதிரடி!

கோகோ கோலா நெஸ்லே
கோகோ கோலா நெஸ்லே

இஸ்ரேலுக்கு ஆதரவளித்ததாகக் கூறி கோகோ கோலா மற்றும் நெஸ்லே தயாரிப்புகளை இனி தங்களின் உணவகங்களில் விற்பனைக்கு வைப்பதற்கு தடை விதித்து துருக்கி நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக துருக்கி நாடாளுமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அந்த இரு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டுள்ள இரு நிறுவனங்களும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

துருக்கி நாடாளுமன்றம்
துருக்கி நாடாளுமன்றம்

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் தேநீர் விடுதிகளில் இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள் இனிமேலும் விற்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் நுமன் குர்துல்மஸ் இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும், ஆனால் தொடர்புடைய நிறுவனங்கள் எவை என அடையாளப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோகோ கோலா மற்றும் நெஸ்லே தயாரிப்புகளை புறக்கணித்துள்ளதாக நாடாளுமன்ற தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்தே, நாடாளுமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் குண்டுவீச்சில் உருக்குலைந்த காசா நகரம்
இஸ்ரேல் குண்டுவீச்சில் உருக்குலைந்த காசா நகரம்

துருக்கியின் சமூக ஆர்வலர்கள் குழு தங்கள் சமூக ஊடக பக்கத்தில், இஸ்ரேல் மற்றும் அந்த நாடை ஆதரிக்கும் நாடுகள் தயாரிக்கும் பொருட்களை துருக்கி மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். இது மட்டுமின்றி, காஸா மீது கண்மூடித்தனமாக தாக்குதல் முன்னெடுக்கும் இஸ்ரேல் நடவடிக்கையை துருக்கி அரசாங்கம் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் வருகிறது.

இந்த நிலையில் காசா பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளதாகவும், இதில் சிறார்கள் மட்டும் 4,100 எனவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக காசாவுக்குள் இஸ்ரேல் நடத்திய கொடூர நடவடிக்கைகளுக்கு எதிராக லட்சக்கணக்கான துருக்கியர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் சமூக ஊடக பக்கங்களிலும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in