பருவநிலை மாற்றத்தால் உருவான பேரிடர் எங்கள் நாட்டில் மட்டுமே நிலைக்காது: ஐ.நாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் உருவான பேரிடர் எங்கள் நாட்டில் மட்டுமே நிலைக்காது: ஐ.நாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தினால் உருவாகியுள்ள பேரிடர் பாகிஸ்தானில் மட்டுமே நிலைக்காது என அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபைக்கு எச்சரிக்கை விடுத்தார். அதில், “பேரழிவுகரமான வெள்ளத்தை அடுத்து, காலநிலை பேரழிவுகள் எங்கள் நாட்டிற்குள் மட்டும் இருக்காது. பாகிஸ்தானில் நடந்தது பாகிஸ்தானில் மட்டுமே நிலைக்காது. புவி வெப்பமயமாதலின் தாக்கத்திற்கு இதைவிட அப்பட்டமான மற்றும் அழிவுகரமான உதாரணத்தை பாகிஸ்தான் பார்த்ததில்லை. பாகிஸ்தானில் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. தங்கள் சொந்த தவறு இல்லாமல் புவி வெப்பமடைதலுக்காக எனது மக்கள் ஏன் இவ்வளவு அதிக விலையை செலுத்துகிறார்கள்?. எங்களின் கரியமில வாயு உமிழ்வை பார்க்காமல் இயற்கை தனது கோபத்தை பாகிஸ்தான் மீது கட்டவிழ்த்து விட்டது.

இந்தப் பெரும் வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட எனது மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் அதிகமானோர் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆபத்தில் உள்ளனர். விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் எங்கள் நாடு காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளனர். ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் காலநிலை அகதிகளை பார்வையிட்டு அவர்களுடன் பேசினார். பாகிஸ்தானின் கடினமான நேரத்தில் ஆதரவாக நின்ற அனைத்து நாடுகளுக்கும், அமைப்புகளுக்கும் நன்றி” என தெரிவித்தார்.

மேலும், " எனது உண்மையான கவலை இந்த சவாலின் அடுத்த கட்டத்தைப் பற்றியது, கேமராக்கள் உக்ரைன் போன்ற நாடுகளின் பின்பு ஓடும்போது, எனது நாடு தனித்து விடப்படும். நாடு தீவிரமான விளைவுகளை அனுபவிக்கும். நிரந்தர உணவுப் பாதுகாப்பின்மை, நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக 11 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பின் வரையறை மாறிவிட்டது. உலகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும், ஏனெனில் ஒரு காலத்திற்குப் பிறகு போர்களை எதிர்த்துப் போராட பூமியில் எதுவும் இருக்காது” என்றும் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்தார்

பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்த பருவமழையால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 1,545 பேர் உயிரிழந்தனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து இடம்பெயர்ந்தனர். பெருவெள்ளமான நீர் கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றது. இடம்பெயர்ந்தவர்கள் பாதுகாப்பின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர், மேலும் பெரும்பாலும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர். தேங்கி நிற்கும் வெள்ளம் தோல் மற்றும் கண் நோய்த்தொற்றுகள், வயிற்றுப்போக்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்குகின்றன என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in