மன உளைச்சலைத் தரும் பருவநிலை மாற்றம்

கோவிட் பெருந்தொற்றைவிடவும் அதிக அச்சத்தை உருவாக்கியிருக்கிறது
மன உளைச்சலைத் தரும் பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம் ஏற்படுத்திவரும் கொடூர விளைவுகளை உலகம் பார்த்துவருகிறது. சீனாவில் பெருவெள்ளம், கனடாவில் அனல் காற்று, அமெரிக்காவில் காட்டுத் தீ என உலகின் பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இந்நிலையில், மனிதர்களின் மனநலனிலும் பருவநிலை மாற்றம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கரோனா தொடர்பான அச்சத்தைவிடவும் இந்தப் பிரச்சினைதான் தங்களுக்குப் பெரும் மன உளைச்சலைக் கொடுப்பதாக 48 சதவீத அமெரிக்கர்கள் கூறியிருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் (ஏபிஏ). பெருந்தொற்று கூட இன்னும் சில மாதங்களில் அல்லது ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால், பருவநிலை ஏற்படுத்திவரும் தாக்கத்தின் விளைவுகள் இனி பல ஆண்டுகளுக்குத் தொடரும் எனும் அடிப்படையில் இத்தகைய மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகியிருப்பதாக ஏபிஏ குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல, வளர்ந்துவரும் நாடுகளில் வசிப்பவர்களும் இந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நைஜீரியாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால், கால்நடை வளர்ப்பில் கடுமையான பிரச்சினைகளைப் பலர் எதிர்கொள்கிறார்கள். இதனால், தங்கள் கால்நடைகளுக்குத் தீனி தேடி, இடம்விட்டு இடம் நகர நேருகிறது. இதன் காரணமாக விளைநிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல்கள் நிகழ்கின்றன. வன்முறைச் சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள் பல நைஜீரியர்கள்.

கொலம்பியா நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் ஏழைகள் எனும் நிலையில், அங்கு அதிகரித்துவரும் வெப்பநிலையால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றன. 2040-ம் ஆண்டுவாக்கில் அங்கு 0.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றம் தொடர்பான எதிர்கால அச்சம், இயற்கைப் பேரழிவுகளைப் பற்றிய நிகழ்கால அச்சம் என தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பலர் தெரிவித்துள்ளனர். தாங்கள் பயன்படுத்தும் கார்களிலிருந்து வெளியேறும் புகை, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகப் பலர் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார்கள். வன்முறைச் சம்பவங்கள், தற்கொலைகள் போன்ற அசம்பாவிதங்களுக்கும் பருவநிலை மாற்றம் வழிவகுக்கிறது.

இதில் ஆறுதலான ஒரே விஷயம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பருவநிலை மாற்றம் குறித்த கருத்துகளை ஏற்க மறுத்தவர்கள், இப்போது அதன் தாக்கத்தை நேரடியாகப் பார்த்த பின்னர் அதுகுறித்த விழிப்புணர்வைப் பெற்றுவருகிறார்கள் என்பதுதான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in