இலங்கையிலிருந்து கிளம்பியது ‘யுவான் வாங் 5’

சலசலப்பை ஏற்படுத்திய சீனக் கப்பலின் வருகையும் புறப்பாடும்
இலங்கையிலிருந்து கிளம்பியது 
‘யுவான் வாங் 5’

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சீன விண்வெளி ஆராய்ச்சி மற்றும் உளவுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இன்று (ஆக.22) மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. அம்பாந்தோட்டையிலிருந்து கிளம்பியிருக்கும் இக்கப்பல், சீனாவின் ஜியாங் ஜின் துறைமுகத்தைச் சென்றடையவிருக்கிறது.

சீனாவின் ‘யுவான் வாங்’ வரிசையைச் சேர்ந்த கப்பல்களின் 5-வது கப்பலான ‘யுவான் வாங் 5’ இந்த வரிசையிலேயே அதிகமான அதி நவீன சாதனங்களைக் கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ரேடியோ ஆன்டெனா, ரேடார் போன்ற கருவிகள் மூலம் எந்தச் செயற்கைக்கோள்களையும் கண்காணிக்க முடியும். நமது ஏவுதளத்தையும் கண்காணிக்க முடியும். 750 கிலோமீட்டர் சுற்றளவில் கண்காணிக்கும் திறன் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள துறைமுகங்களும், விமானப் படைத் தளங்களும் அதன் கண்காணிப்பு வளையத்துக்குள் வரும்.

இந்தியாவின் பெரும்பாலான விண்வெளித் திட்டங்கள், ஏவுதளங்கள் தென்னிந்தியாவில்தான் இருக்கின்றன. எனவே, இலங்கையில் இருந்தபடி இவற்றையெல்லாம் கண்காணிக்க முடியும். மோசமான வானிலையிலும் இந்தக் கப்பலின் சாதனங்கள் சிறப்பாகச் செயல்படும். இந்தக் காரணங்களை முன்வைத்து இக்கப்பலின் வருகையை இந்தியா எதிர்த்தது. தனது ஆட்சேபத்தை இலங்கையிடமும் அழுத்தமாகப் பதிவுசெய்தது.

எரிபொருள் நிரப்புவதற்காக என்றே காரணம் சொல்லப்பட்டாலும், செயற்கைக்கோள்களையும் ஏவுகணைகளையும் கண்காணிப்பதற்காக சீன ராணுவம் பயன்படுத்தும் விண்வெளி ஆய்வு மற்றும் உளவுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகையை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 11-ம் தேதியே வந்திருக்க வேண்டிய கப்பல், இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, 5 நாட்கள் தாமதமாகி 16-ம் தேதி காலை 8.20 மணிக்கு இலங்கைக்கு வந்தது.

சீனா கேட்டுக்கொண்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டதற்கு இணங்க பணியாளர்கள் யாரும் சுழற்சி முறையில் பணியாற்றவில்லை என்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். குறுக்கீடு செய்யக்கூடாது, பாதுகாப்பு நடவடிக்கை கூடாது எனும் அடிப்படையில் அதிர்வெண்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இக்கப்பலுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், அதி நவீன சாதனங்கள் கொண்டிருப்பதால் இக்கப்பல் குறித்து மிகுந்த எச்சரிக்கையாகவே இந்தியா இருந்தது. என்னதான் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான ஆராய்ச்சிக் கப்பல் என்று இதை சீனா அழைத்தாலும், சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கப்பல் குறித்து அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிக்குத் தகுதி பெற சீனாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், இந்தக் கப்பலை அம்பாந்தோட்டையில் அனுமதிப்பதை இலங்கையால் தவிர்க்க முடியவில்லை எனக் கருதப்படுகிறது.

ஆரம்பத்தில் அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானத்தில் பெரும் தொகையை முதலீடு செய்தது சீனா. பின்னர் இலங்கையால் அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியாததால் 99 ஆண்டுகளுக்கு அந்தத் துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுவிட்டது. இன்றைக்கு சீனாவின் கட்டுப்பாட்டில்தான் துறைமுகம் இருக்கிறது. இதைத் தங்கள் கடற்படைத் தளமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு இலங்கையிடம் சீனா வலியுறுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கருத்தை அமெரிக்கா பகிரங்கமாகவே பதிவுசெய்திருக்கிறது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல்வழி முடக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், யுவான் வாங் 5 கப்பலின் இலங்கை வருகை பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in