கரோனா பரவல்: கடுமையான பொருளாதார மந்த நிலையில் சீனா!

கரோனா பரவல்: கடுமையான பொருளாதார மந்த நிலையில் சீனா!

சீனாவில் கரோனா வைரஸின் புதிய திரிபுகள் அதிகமாகப் பரவுவதால் ஆங்காங்கே பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பால் அந்த நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளும் சீனப் பொருளாதார வளர்ச்சி, வேகம் பெற முடியாமல் தடைக்கல்லாக நீடிக்கின்றன. இந்தச் சூழலில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையை அடைந்திருக்கிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையை அடைந்தது. இரண்டாவது காலாண்டிலும் இது நீடிக்கும் என்பதால் சந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று நோமுரா பங்குகள் முதலீட்டு நிறுவனம் எச்சரிக்கிறது.

சீனாவின் மனை விற்பனைச் சந்தையில் தொடர்ந்து சரிவு நிலவுவதாலும், சீன மாநிலங்களுக்கு இடையில் மக்களும் சரக்குகளும் நடமாட புதிய கட்டுப்பாடுகள் ஆங்காங்கே அமல்படுத்தப்படுவதாலும் சீனப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்காது என்கின்றனர் நோமுரா நிறுவனப் பொருளாதார நிபுணர்கள்.

நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக - தனிப்பட்ட முறையில் அளிக்கப்படும் மனித சேவைகள், கட்டுமானத் தொழில், ஆலைகளில் நடைபெறும் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

முதல் 3 மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது நிலவும் 2.9 சதவீத வளர்ச்சிதான் உண்மையில் சாத்தியம் என்று கருதுகின்றனர். முழு ஆண்டுக்கு சீனப் பொருளாதார வளர்ச்சி வீதம் 4.3 சதவீதமாக இருக்கும் என்றே கணிக்கின்றனர்.

ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. நுகர்வோர் செலவு செய்வது தாராளமாக உயர்ந்தது. தொழில் துறை உற்பத்தி யாரும் எதிர்பாராத வகையில் - கணிப்புகளைவிட - அதிகமாக இருந்தது. ஆனால் பெருந்தொற்றுக் கிருமியின் புதிய உருமாற்றமும் பரவலும் நிலைமையை அப்படியே மாற்றிவிட்டது. ஷென்ஷான் மாநிலத்தில் உள்ள தொழில்நுட்பத் துறையிலும் உற்பத்தி ஆலைகளிலும் வைரஸ் பரவலால் வேலைகள் அப்படியப்படியே நிறுத்தப்பட்டன. ஷாங்காய் நிதிமைய நகரைச் சேர்ந்த மக்கள், வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நகரில் இப்போது வீடு வீடாக நோய் அறிகுறி சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்று (மார்ச் 26) மட்டும் 5,600 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இதுதான் உயர் அளவாகும். சீன மத்திய வங்கி இந்த வளர்ச்சிக்கேற்ப, கையிருப்பு ரொக்க விகிதத்தைக் குறைக்கும், இதர நிதிசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவற்றுடன் சீன மாநிலங்களும் உள்ளூர் நிர்வாகங்களும் மனை வணிகத் துறை மீது விதித்த கட்டுப்பாடுகளை விலக்கி, அத்துறைக்குப் புத்துயிர் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in