வட கொரியா அணு ஆயுதச்சோதனை நடத்துவதை சீனா விரும்பவில்லை: சொல்கிறார் ஐ.நா தூதர் ஸாங் ஜுன்!

வட கொரியா அணு ஆயுதச்சோதனை நடத்துவதை சீனா விரும்பவில்லை: சொல்கிறார் ஐ.நா தூதர் ஸாங் ஜுன்!

வட கொரியா ஒரு புதிய அணுஆயுத சோதனையை நடத்துவதை சீனா விரும்பவில்லை என்று அந்த நாட்டின் ஐ.நாவுக்கான தூதர் ஸாங் ஜுன் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்காக வடகொரியாவின் மீது ஐ.நாவில் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் முயற்சியை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தனது வீட்டோ அதிகாரம் மூலமாக முறியடித்தது.

2017-ம் ஆண்டிற்குப் பிறகு வடகொரியா மீண்டும் எந்த நேரத்திலும் அணு ஆயுதச்சோதனையை நடத்தும் என எச்சரித்த அமெரிக்கா, அவ்வாறு சோதனை நடத்தப்பட்டால் சீனாவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த ஸாங் ஜுன், "என்ன நடக்கும் என்று பார்ப்போம், ஆனால், அணுசக்தி சோதனையால் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். சீனாவின் முக்கிய இலக்குகளில் ஒன்று அணுவாயுதமயமாக்கலை தடுத்தல். எனவே, நாங்கள் வடகொரியாவின் மற்றொரு அணு ஆயுதச் சோதனையைப் பார்க்க விரும்பவில்லை" என்று கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவும், ரஷ்யாவும் மனிதாபிமான அடிப்படையில் வடகொரியா மீது ஐநா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய ஸாங் ஜுன், " வட கொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம். எனவே, வடகொரியா மீது மேலும் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்தால் இன்னும் அதிக சீரழிவுதான் ஏற்படும். பொருளாதாரத் தடைகள் பிரச்சனைகளை தீர்க்காது" என தெரிவித்தார்.

வட கொரியா மீதான ஒருதலைபட்சமான தடைகளைத் தளர்த்தவும், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்கும் முயற்சியாக தென் கொரியாவுடன் நடக்கும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது. ஆனால், வடகொரியாவை பேச்சுவார்த்தைக்காக பலமுறை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் முன்நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது கிழக்கு கடல் பகுதிகளில் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து எட்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in