54 சீன செயலிகளுக்கு தடை: இந்தியாவை கடுமையாகச் சாடும் சீனா!

54 சீன செயலிகளுக்கு தடை: இந்தியாவை கடுமையாகச் சாடும் சீனா!

சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளை தொடர்ந்து இந்தியா தடை செய்து வருவதற்கு எதிராக, சீன அரசு தரப்பில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

இந்திய - சீன எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. எல்லையின் ஊடுருவலுக்கு இணையாக, இந்தியர்களின் கணினிகள் மீதான சைபர் தாக்குதல் மற்றும் செயலிகள் வாயிலாக செல்போன்களை ஊடுருவது போன்றவற்றையும் சீனா தொடர்ந்து வருவதாக இந்தியா கண்டனம் தெரிவித்து வந்தது.

அவற்றை பிரதிபலிக்கும் வகையில் சீன நிறுவனங்களின் ஆட்சேபத்துக்கு உரிய செல்போன் செயலிகளை. அவ்வப்போது இந்தியா தடைசெய்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு எதிராக சீனச் செயலிகள் செயல்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்தச் செயலிகள் அவற்றின் வரம்புகளுக்கு அப்பாலும், செல்போனின் பாதுகாப்பு அடுக்குகளில் ஊடுருவி தனிநபர்களின் தகவல்களை சேகரிப்பதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தத் தனிநபர் தரவுகளை அந்த நிறுவனங்கள் தங்களது தேசத்தில் அமைந்திருக்கும் சர்வர்களில் சேமிக்கும் போக்கு குறித்தும் இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

டிக் டாக் செயலியில் தொடங்கி கடந்த 2 வருடங்களாக, பல்வேறு தவணைகளாக இந்தியாவில் சீனச் செயலிகள் தடைசெய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பிப்.14 அன்று பியூட்டி கேமரா, ஸ்வீட் கேமரா ஹெச்டி, பேஸ் பூஸ்டர், ஆப் லாக்கர், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட 54 சீன செயலிகளை தடைசெய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இவற்றில், இந்தியாவில் முன்னணியில் உள்ள ‘விவா’ செல்போன் நிறுவனத்தின் வீடியோ எடிட்டரும் அடங்கும்.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இம்முறை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், சீன உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகச் செயல்பாடுகளில் இந்தியா பாகுபாடற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்றும், அந்த நடவடிக்கைகள் தனிப்பட்ட நிறுவனங்களை நசுக்குவதாக அமையக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இறுதியாக, பிரிக்க முடியாத அண்டை தேசங்களின் தவிர்க்க முடியாத வர்த்தக செயல்பாடுகளை பாதிக்கும் வகையிலான, இந்தியாவின் இந்த அணுமுறையை சீனா தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் சீன வர்த்தக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.