‘புத்தம்புது பூமி வேண்டும்’ - புதிய தேடலுடன் களமிறங்கும் சீனா!

‘புத்தம்புது பூமி வேண்டும்’ - புதிய தேடலுடன் களமிறங்கும் சீனா!

பூமிக்கு வெளியே ஓர் உலகத்தைத் தேட வேண்டும் எனும் கருத்து ஹாலிவுட் அறிவியல் புனைகதைகளில் மட்டும் வெளிப்படும் விஷயம் அல்ல. பூமியைப் போன்ற வாழிடச் சூழல் கொண்ட இன்னொரு கோள் கிடைக்குமா எனும் தேடலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கின்றன. இந்நிலையில், ‘பூமி 2.0’ எனும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது சீனா.

நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே, பால்வெளி அண்டத்துக்குள் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தைத் தேடத் திட்டமிட்டிருக்கிறது சீனா. அடுத்து வரும் தசாப்தங்களில் பூமி பேரழிவுச் சூழல்களைச் சந்திக்கும் எனக் கருதப்படும் சூழலில் இத்தகைய முயற்சியில் சீனா இறங்குகிறது.

ஏற்கெனவே, நிலவு, செவ்வாய் கிரகம் போன்றவை தொடர்பான விண்வெளித் திட்டங்களில் பெரும் முதலீடு செய்திருக்கும் சீனா புதிய பூமியைத் தேடும் திட்டத்துக்காகப் புதிய சிந்தனையுடன் களமிறங்குகிறது. 2021-ல் 55 விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது சீனா. 2022-ம் ஆண்டிலும் விண்வெளித் துறையில் சீனாவே கோலோச்சும் எனும் பேச்சு உருவாகும் வகையில் அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் துறை செயல்பட்டது.

இது தொடர்பாக ‘நேச்சர்’ இதழில் வெளியான செய்திக் கட்டுரை, ‘பூமி 2.0’ திட்டம் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறது. தற்போது அது தொடர்பான பரிசீலனையில் நிபுணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். திட்டத்துக்குச் சம்மதம் கிடைத்ததும், ஜூன் மாதம் அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கும். அதன் பின்னர் நிதி திரட்டும் பணிகளும் ஆரம்பமாகும்.

பல்வேறு புதிய அம்சங்கள் அடங்கிய 7 அதிநவீன தொலைநோக்கிகள் கொண்ட செயற்கைக்கோள் இது. இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு, நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் ஆராயப்படும். உயிர்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் குறியீடுகள் தென்படுகின்றனவா என சீன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

ஏற்கெனவே, விண்வெளிக்கு நாசா அனுப்பிய கெப்ளர் தொலைநோக்கி, ஹபிள் தொலைநோக்கி, டெஸ் தொலைநோக்கி (Transiting Exoplanet Survey Satellite), கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி போன்றவை செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் சீனாவின் இந்தத் திட்டம் மேலும் நவீனமயமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கெப்ளர் தொலைநோக்கியைவிட 10 முதல் 15 மடங்கு அதிகத் திறன் கொண்டதாகத் தங்கள் தொலைநோக்கி இருக்கும் என இத்திட்டத்தின் தலைமை ஆய்வாளர் ஜியான் ஜெ தெரிவித்திருக்கிறார்.

இந்த அமைப்பின் 6 தொலைநோக்கிகள் 12 லட்சம் நட்சத்திரங்களை உற்றுநோக்கி ஆராயும். அதில் ஒளி குன்றிய மற்றும் மிகத் தொலைவில் அமைந்திருக்கும் நட்சத்திரங்களும் கண்காணிக்கப்படும். ஏழாவது தொலைநோக்கி, எந்த நட்சத்திரத்தின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவராமல் தன்னிச்சையாக வலம் வரும் தொலைதூரக் கோள்களை (rogue planets) ஆராயும்.

இது முழுக்க முழுக்க சீன விஞ்ஞானிகளே பங்கேற்கும் திட்டமாக இருக்காது. சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்ற ஒரு செயற்கைக்கோள் தொலைநோக்கித் திட்டமாக, பிளேட்டோ எனும் திட்டத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2026-ல் தொடங்க திட்டமிட்டிருக்கிறது. அதில் 26 தொலைநோக்கிகள் இருக்கும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.