60 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வெப்ப அலை: தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்ட சீனா!

60 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வெப்ப அலை: தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்ட சீனா!

60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா மிக மோசமான வெப்ப அலையை சந்தித்து வருகிறது. சீனாவில் 12க்கும் மேற்பட்ட நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் நிலவுவதால், தொழிற்சாலைகளை மூடுவதற்கு சிச்சுவான் மாகாண அரசு உத்தவிட்டுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதால், அப்பகுதியில் நிலவும் மின்பற்றாக்குறையை போக்க அனைத்து தொழிற்சாலைகளையும் ஆறு நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சிச்சுவான் மாகாணம் செமிகண்டக்டர் மற்றும் சோலார் பேனல் தொழிற்சாலைகளுக்கான முக்கிய உற்பத்தி தளமாகும். இந்த மாகாணம் சீனாவின் லித்தியம் மற்றும் பாலிசிலிகான் சுரங்க மையமாக உள்ளது. லித்தியம் மின்சார கார் பேட்டரிகளின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய அரசின் உத்தரவால் இந்த மாகாணத்தில் இயங்கும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களான ஆப்பிள் சப்ளையர், ஃபாக்ஸ்கான், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், டெஸ்லா மற்றும் இன்டெல் நிறுவனங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் ஏர் கண்டிஷனிங் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வறட்சியால் சீனாவில் நதி நீர் மட்டமும் குறைந்துள்ளதால், நீர்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளது.

சிச்சுவான் மாகாணம் தவிர, ஜியாங்சு, அன்ஹுய் மற்றும் ஜெஜியாங் உள்ளிட்ட பிற முக்கிய சீன மாகாணங்களிலும் வெப்ப அலையால் மின்சார விநியோகம் குறைந்துவிட்டதால், மின்சாரத்தை சேமிக்குமாறு தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு மாகாண அரசுகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.

சில பிராந்தியங்களில் அலுவலகங்கள் தங்கள் ஏசி வெப்பநிலையை 26 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மின்சாரத்தை சேமிப்பதற்காக முதல் மூன்று தளங்களுக்கு லிப்ட் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் கடுமையான வெப்பம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடந்த ஆண்டைவிடவும் 12.9 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனாவின் தென்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு பகுதியில் மழைப்பொழிவு மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in