செர்னோபில் அணு உலையைக் கைப்பற்றிய ரஷ்யப் படை: விளைவுகள் எப்படி இருக்கும்?

செர்னோபில் அணு உலையைக் கைப்பற்றிய ரஷ்யப் படை: விளைவுகள் எப்படி இருக்கும்?

ரஷ்யாவின் மூர்க்கத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் உக்ரைன் இன்னொரு ஆபத்தையும் எதிர்கொண்டிருக்கிறது. செர்னோபில் அணு உலையின் கட்டுப்பாட்டுப் பகுதி உட்பட அதன் அனைத்துப் பகுதிகளையும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியிருக்கிறது என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மைஹால் கூறியிருக்கிறார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், நீர், நிலம், வானம் என மூன்று வழிகள் மூலமாகவும் ஒரு ஐரோப்பிய நாடு தாக்குதலுக்குள்ளாவது இதுவே முதன்முறை. எந்தத் தரப்பிலிருந்தும் ராணுவ ரீதியிலான உதவி கிடைக்காமல், ரஷ்யப் படைகளின் தாக்குதலை ஒற்றையாளாக எதிர்கொண்டிருக்கிறது உக்ரைன். நிலவரம் குறித்து அவசரக் கூட்டம் நடத்த முடிவெடுத்தது நேட்டோ அமைப்பு. இதன் தொடர்ச்சியாக, நேட்டோ படைகள் உக்ரைனுக்கு உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், செர்னோபில் அணு உலையை வைத்து நேட்டோவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த, ரஷ்யா திட்டமிடுவதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை வட்டாரங்களே தெரிவித்திருக்கின்றன.

உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து வடக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் செர்னோபில் அணு உலை இயங்கிவந்தது. 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுவதற்கு முன்பு உக்ரைன் அதன் ஒரு பகுதியாக இருந்தது. நான்கு உலைகள் கொண்ட இந்த அணு உலையிலிருந்து மின்சார உற்பத்தி நடந்துவந்தது. 1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஒரு மின் பொறியியல் சோதனையை நடத்த சில பொறியாளர்கள் திட்டமிட்டனர். அதிக அனுபவம் இல்லாத அந்தப் பொறியாளர்கள் மேற்கொண்ட அந்தச் சோதனையின்போது, எதிர்பாராதவிதமாக அணு உலையில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு, 50 டன்னுக்கும் அதிகமான கதிரியக்கப் பொருட்கள் காற்றில் பரவத் தொடங்கின. இந்த விபத்தின் காரணமாக ஓரிரு நாட்களில் 32 பேர் உயிரிழந்தனர். கதிரியக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இதுவரை 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் அது. 2000-ல் அந்த அணு உலை மூடப்பட்டது.

தற்சமயம் அங்கிருப்பதில் பெரும்பான்மையானவை அணுக் கழிவுகள்தான். அதிகமான கதிரியக்கம் கொண்ட 20,000 எரிபொருள் கட்டமைப்புகள் தற்போது அங்கு பராமரிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், அணு உலையைச் சுற்றி சண்டைகள் நடந்தாலோ, உலையில் தவறுதலாக ரஷ்யர்கள் எதையேனும் கையாண்டாலோ பெரும் வெடிவிபத்து ஏற்படலாம் எனும் அச்சம் எழுந்திருக்கிறது. அணு உலை மற்றும் அணுக்கழிவு சேமிப்பு வசதிகளின் நிலை குறித்து தற்சமயம் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையே, ரஷ்யப் படைகள் செர்னோபில் அணு உலையைக் கைப்பற்றியிருப்பது ஆபத்தான நகர்வு என அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி, “செர்னோபில் அனு உலையைக் கைப்பற்றி, அதன் ஊழியர்களைப் பிணைக் கைதிகளாக ரஷ்யப் படைகள் பிடித்துவைத்திருப்பது குறித்து அமெரிக்க அரசு கோபமடைந்திருக்கிறது. இது சட்டத்துக்குப் புறம்பான, ஆபத்தான செயல். அணு உலை ஊழியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருப்பது அணு உலையின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதிலும், அணுக்கழிவு சேமிப்பு வசதியைப் பராமரிப்பதிலும் பின்னடைவை ஏற்படுத்தலாம். இது நிச்சயம் ஆபத்தான மற்றும் கவலையை ஏற்படுத்தும் விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி

செர்னோபில் அணு உலையில் விபத்து நடந்தபோது மூடி மறைக்கவே சோவியத் ஒன்றியம் முயற்சிசெய்தது. ஸ்வீடன் இதைக் கண்டறிந்து அறிவிக்கும் வரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சோவியத் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவேயில்லை.

இப்படியான பின்னணியில், செர்னோபில் அணு உலை ரஷ்யப் படைகளின் கைகளில் சிக்கியிருப்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயம்!

Related Stories

No stories found.