‘புதினின் நண்பரை விடுவித்து எங்களை மீட்கவும்’ - பிடிபட்ட பிரிட்டன் வீரர்கள் போரிஸிடம் மன்றாடல்

‘புதினின் நண்பரை விடுவித்து எங்களை மீட்கவும்’ - பிடிபட்ட பிரிட்டன் வீரர்கள் போரிஸிடம் மன்றாடல்

உக்ரைனின் மரியுபோல் ரஷ்யப் படைகளால் பிடிக்கப்பட்ட பிரிட்டன் வீரர்கள் தங்களை விடுவிக்குமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அவர்கள் கோரிக்கை விடுத்த காட்சி ரஷ்ய அரசின் ‘ரோஸ்ஸியா 24’ செய்தி சேனலில் நேற்று (ஏப்.18) ஒளிபரப்பானது. உக்ரைன் படையினரால் கைதுசெய்யப்பட்ட ரஷ்ய ஆதரவு அரசியல் தலைவர் விக்டர் மெட்வெட்சக்கை விடுவித்தால், தங்கள் இருவரையும் ரஷ்யப் படைகள் விடுவிப்பார்கள் என்று அந்தக் காணொலியில் அவர்கள் பேசியிருக்கின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த அய்டென் அஸ்லின் (28), ஷான் பின்னெர் (48) இருவரும் கடந்த வாரம் மரியுபோல் நகரில், ரஷ்யப் படைகளால் பிடிக்கப்பட்டனர். பிடிபடுவதற்கு முன்னர் இருவரும் பேசி வெளியிட்ட காணொலியும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. உக்ரைனில் வசித்துவரும் இருவரும், இந்தப் போரில் உக்ரைனுக்காகப் போரிட விருப்பத்துடன் முன்வந்தவர்கள். பிரிட்டனின் ராயல் ஆங்கிலியன் ரெஜிமென்ட் படையில் பணியாற்றிய ஷான் பின்னெர். 4 ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனுக்குச் சென்ற அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

இதற்கிடையே, உக்ரைன் அரசியல் களத்தில் ‘இருள் இளவரசர்’ என அழைக்கப்படும் மெட்வெட்சக், தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் காணொலியை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டிருக்கிறார்கள். “மரியுபோல் நகரின் பாதுகாவலர்களையும், மனிதாபிமான வழித்தடத்தின் மூலம் பாதுகாப்பாக வெளியேற வழியில்லாமல் இருக்கும் உக்ரைன் குடிமக்களையும் ரஷ்யா விடுவிக்க, உக்ரைன் என்னை விடுவிக்க வேண்டும்” என அவர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் கைதிகளைப் பரிமாற்றம் செய்துகொள்வது தொடர்பாக, பொதுவெளியில் எழுந்திருக்கும் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னதாக, மெட்வெட்சக் கைதால் உற்சாகமடைந்த ஸெலன்ஸ்கி, “உங்கள் ஆளை விடுவிக்க வேண்டுமெனில், ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எங்கள் பையன்களையும் பெண்களையும் விடுவிக்க வேண்டும்” என்று ரஷ்யாவை அறிவுறுத்தியிருந்தார். எனினும், மெட்வெட்சக்கை மீட்பதில் ரஷ்யா ஆர்வம் காட்டவில்லை.

உக்ரைனின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ‘ஆப்போசிஷன் ப்ளாட்ஃபார்ம் ஃபார் லைஃப்’ எனும் கட்சியின் தலைவர் மெட்வெட்சக். இக்கட்சி ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டது. புதினுக்கு மிக நெருக்கமானவர். புதினை அவரது மகள் ஒரு ஞானத்தந்தையாகக் கருதும் அளவுக்கு நெருக்கம். ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் பெரும் செல்வம் சேர்த்தவர். தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய மூன்றாவது நாள் வீட்டுக்காவலிலிருந்து தப்பி தலைமறைவானார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கும் அமெரிக்கா, புதினின் நண்பர் எனும் முறையில் அவர் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த வாரம் அவரை உக்ரைன் படைகள் கைதுசெய்தன.

இந்நிலையில், “போரிஸ் ஜான்சன் சொல்லிக்கொள்வது போல, பிரிட்டன் குடிமக்கள் குறித்து அவர் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், உதவி செய்வார்” என அய்டென் அஸ்லின் அந்தக் காணொலியில் கூறியிருக்கிறார். மெட்வெட்சக்கின் மனைவி ஒக்ஸானாவும் தனது கணவரை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in