கனடாவில் அவசர நிலை பிரகடனம்!- 50 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் நடவடிக்கை

கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ

கரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலையை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ பிரகடனப்படுத்தியுள்ளார். கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அந்நாட்டில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதனிடையே, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கனடா அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், லாரி ஓட்டுநர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு அறிவித்ததோடு, கரோனா கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.

கனடா அரசின் இந்த நடவடிக்கைக்கு லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கனடா- அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கியதால், இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, பாலத்தில் நின்ற லாரிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்நிலையில், லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலையை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ பிரகடனப்படுத்தியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980-ம் ஆண்டுவாக்கில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

தற்போது, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, போராட்டக்காரர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் கனடாவில் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in