கனடாவில் திடீர் மாற்றம்... காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக குரல் எழுப்பும் எம்.பிக்கள்!

சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

கனடாவில் வசிக்கும் இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் உத்தரவிட்டதற்கு, கனடா எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் ரா ஏஜென்ட்டுகள் இந்த கொலையை நிகழ்த்தியதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா நாடாளுமன்றத்தில் இந்தியா மீது பகிரங்க குற்றம்சாட்டியதில் இரு நாட்டு உறவு விரிசல் கண்டிருக்கிறது.

பிரதமர் ஜஸ்டின் உடன் அமைச்சர் டொமினிக்
பிரதமர் ஜஸ்டின் உடன் அமைச்சர் டொமினிக்

பரஸ்பரம் இருநாடுகளும் தூதரக உயரதிகாரிகளை வெளியேற்றி இருக்கின்றன. கனடா விசாக்களுக்கு இந்தியா தடை விதித்திருக்கிறது. இதனிடையே கனடாவில் வசிக்கும் இந்துக்களை இந்தியாவுக்கு செல்லுமாறு, காலிஸ்தான் ஆதரவு சீக்கியத் தலைவர்களில் ஒருவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர் வீடியோ ஒன்றில் மிரட்டல் விடுத்திருந்தார்.

இது இந்தியாவில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க, கனடிய சீக்கியத் தலைவரின் மிரட்டலுக்கு கனடா எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு துறையின் அமைச்சரான டொமினிக் லேபிலாங் விடுத்துள்ள செய்தியில், “கனடாவில் ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் மற்றும் பயத்தை தூண்டும் செயல்களுக்கு இடமில்லை” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கனடாவில் அனைத்து சமூக மக்களும் தங்களை பாதுகாப்பாக உணரத் தகுதியானவர்கள். இந்து கனடியர்களைக் குறிவைத்து ஆன்லைனில் வெறுப்பினை பரப்புதல், கனடா விரும்பும் மதிப்புகளுக்கு முரணானது” என்றும் விளக்கியுள்ளார். காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்மூடித்தனமாக கனடா ஆதரவளிக்கிறது என்ற புகாரின் மத்தியில் இந்த அரசியல் நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in