‘எங்கள் குடிமக்களுக்கு இந்தியாவில் ஆபத்து’ கனடாவின் புதிய எச்சரிக்கையால் இருநாட்டு உறவில் மேலும் விரிசல்!

இந்திய பிரதமர் மோடி - கனடா பிரதமர் ஜஸ்டின்
இந்திய பிரதமர் மோடி - கனடா பிரதமர் ஜஸ்டின்

41 தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்றது, இந்தியாவிலுள்ள தங்கள் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பியது என கனடாவின் புதிய பதற்றத்தால் இருநாட்டு உறவில் மேலும் விரிசல் எழுந்துள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியா - கனடா மோதல் விவகாரம் வெடித்தது. நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்திய உளவு ஏஜெண்டுகள் இருப்பதாக கனடா குற்றம்சாட்டியதோடு, குறிப்பிட்ட தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா தூதரக அதிகாரிகளை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. மேலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான பிரிவினைவாதிகளுக்கு கனடா அடைக்கலம் அளிப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டியது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிரான விசாரணைகளை கனடாவும் முடுக்கிவிட்டது.

இதற்கிடையே தலைநகர் டெல்லி மற்றும் இதர இந்திய நகரங்களின் கனடா தூதரகங்களில் பணியாற்றும் 41 தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை திரும்பப்பெறுவதாக கனடா தெரிவித்தது. இந்தியா அளித்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பதிலுக்கு அதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை என்றும் கனடா தெரிவித்தது.

கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி உடன் பிரதம் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி உடன் பிரதம் ஜஸ்டின் ட்ரூடோ

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் பாதுகாப்பாக இருக்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கனடா குடிமக்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் எதிர்ப்புணர்வு பரப்பப்படுவதாகவும், இவற்றால் அங்கு வசிக்கும் கனடா மக்களுக்கு ஆபத்து எழுந்திருப்பதாகவும் கவலை தெரிவித்தது. இது தொடர்பாக தங்கள் குடிமக்களுக்கான வழிகாட்டுதல் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் இரு நடவடிக்கைகள் காரணமாக, கனடா - இந்தியா இடையிலான விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in